கிங்டம் – திரை விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார வர்க்கத்திடம் சிக்கி படும் பாட்டை நெஞ்சம் நெக்குருக சொல்லி இருக்கிறார்கள். அதை உயிருக்கு உயிரான அண்ணன்-தம்பி பாசப் பின்னணியில் சொல்லி இருப்பது சிறப்பு
.
காவலர் பணிக்கு புதிதாக வந்திருக்கும் சூரிக்கு சிறுவயதில் காணாமல் போன தன் அண்ணன் சிவாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது லட்சியம். பணியில் அவனது வேகத்தையும் துறு துறுப்பையும் பார்த்து ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். கொடுக்கப்பட்ட இந்த பணியை வெற்றிகரமாக முடித்து விட்டால் காணாமல் போன உன் அண்ணனை கண்டுபிடித்து தருவது என் பொறுப்பு என்று மேலதிகாரி சொன்னதை நம்பி இந்த பணிக்குள் இறங்குகிறான்.
அந்தத் தேடலில் அவன் அண்ணனே கிடைக்கிறான். அண்ணனை தன்னுடன் வர எவ்வளவோ கெஞ்சியும் மறுக்கிறான் அண்ணன். அதற்கும் காரணம் இருக்கிறது.அவன் சந்தித்த அண்ணன் அங்கே சாதாரண ஆள் இல்லை. ஒரு கட்டத்தில் தம்பியாலேயே அண்ணனுக்கு உயிர பாயம் ஏற்படுகிறது. இதையெல்லாம் தாண்டி அண்ணன் தம்பி மீண்டும் இணைந்தார்களா என்பதை கலவர நிலவர பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள்.
இதுவரை காதல் நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா, இப்படத்தில் சூரியாக ஒரு சாதாரண காவலர் வேடத்தில் வந்து மொத்த கதையையும் தாங்கி இருக்கிறார். முறுக்காமல் மெருகேறி நிற்கும் மீசை,
குறைந்த தலைமுடி, நிமிர்ந்த நடை என அந்த வேடத்துக்காக நடிப்பை போலவே தன்னையும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். அதுவே சண்டைக்காட்சிகளில் எத்தனை பேரை அடித்து வீசினாலும் நம்ப வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போஸ் நல்வரவு.நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். கிடைத்த கொஞ்ச இடத்திலும் தன் நடிப்பு முத்திரையை பதித்து விடுகிறார் படத்தின் முக்கிய கதாபாத்திரமான நாயகனின் அண்ணன் சிவா வேடத்தில் சத்யதேவ் சாலப்பொருத்தம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரான தலைவன், தம்பியை பார்த்த மாத்திரத்தில் தடுமாறும் அண்ணன் என்ன இரண்டு நிலைப்பாட்டையும் நடிப்பில் அழகாக மேட்ச் செய்கிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ் நிஜமாகவே பயமுறுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோர் கேமரா தீவுகளின் வனப்பை பிரமாண்டமாய் கண்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகிறது.
அனிருத்தின் பின்னணி இசை படத்துக்குப் பலம்.
எழுதி இயக்கியிருக்கிறார் கவுதம் தின்னனூர். ஒரு கடைநிலைக் காவலரை கதாநாயகனாக வைத்துக் கொண்டு தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அந்த மக்களை வைத்து நடக்கும் கடத்தல் தொழில், அதைச்செய்யும் கூட்டம் என மிக விசாலமாக போகும் கதைக்குள் அண்ணன் தம்பி பாசத்தையும் அழகாக இணைத்து இருக்கிறார். ஒரு சாதாரண காவலன் தன் இனத்தின் காவலனாக மாறும் அந்த கிளைமாக்ஸ் ரசிகனின் நிகழ்ச்சியும் மகிழ்ச்சியுமான நேரம்.
