பரமசிவன் பாத்திமா -திரை விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்று மத மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வப் போது மோதல்கள். இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட… கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரி இசக்கி கார்வண்ணன் வருகிறார்.
இந்த கொலைகளை செய்தது இளம் தம்பதிகள் என்பது தெரிய வர…. கொலைகளுக்கான காரணம் என்ன என்பது கிளைமாக்ஸ். அரசு உதவி பெறும் கிறிஸ்தவ நிர்வாகப் பள்ளியில் ஆசிரியராக வரும் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மதங்களால் வேறுபட்ட அவர்கள் மனங்களால் ஒன்றுபட்ட போது காதல் திருமணம். மனமொத்த தம்பதிகளுக்கு இளைஞர்களை கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
எம் எஸ் பாஸ்கர் கிறிஸ்தவ பாதிரியா ராக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி தங்களுக்குக் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அவரது கேமரா நினைவுக்கு வருகிறது. தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பக்கம் பக்கமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை இயக்குநர் மறந்து dவிட்டார் போலும்.
சிறுவயதிலேயே அன்பு வசப்பட்ட பரமசிவன் பாத்திமா என்கிற இரு பாத்திரங்கள் மதங்களைக் கடந்த அன்பினால் இணைகின்றன. ஆனால் மதங்களைக் கடந்து மனிதநேயம் பேச வேண்டிய இந்தப் படம் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட மதத்துக்கான பிரசார பீடமாக மாறி விடுகிறது.
மதங்களைக் கடந்து தங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் வாழும் மனிதர்களை கொலை செய்யும் போதே திரைக்கதையும் தாறு மாறாக கொல்லப்பட்டு விடுகிறது. எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், படத்தின் இரண்டாவது பாதியில் மதங்கள் பற்றிய சர்ச்சைப் பகுதிக்குள் நுழைந்து விட்டார். அது பிரதான கதையை விட்டு விலகி சர்ச்சைகளுக்கு மட்டுமே இடம் அளிக்கிறது.
மத நல்லிணத்திற்காக நாடே போராடிக் கொண்டிருக்கும்
இந்த தருணத்தில் அதற்கு நேர்மாறாக இப்படியும் ஒரு படமா?