மையல் – திரை விமர்சனம்
திருட்டை தொழிலாக கொண்ட நாயகன் இரவில் ஆடு திருடிக் கொண்டு டூவீலரில் வர…
மற்றொரு பக்கம் வயதான தம்பதிகள் இருவரால் கொடூரமாக கொல்லப்பட… இதற்கிடையே ஆடு திருடியவனை பொதுமக்கள் சுற்றி வளைந்து கொள்ள… உயிர் தப்ப ஓடும் அவன் ஒரு கிணற்றில் விழுந்து கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அங்கு தனது மந்திரவாதி பாட்டியுடன் வசித்து வரும் இளம்பெண் அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்கு பாட்டி வகை யில் மாந்திரீகமும் தெரியும். வைத்தியமும் தெரியும் என்பதால் தன் குடிசையில் தங்க வைத்து பச்சிலை வைத்தியத்தில் காலை குணமாக்குகிறாள். அவளின் அக்கறையான அன்பில் காதலுமா கிறான், திருடன்.
அதற்கு மேலும் அவன் அங்கிருக்க பிடிக்காதஅவளது மந்திரவாதி பாட்டி, இனி மறந்தும் இந்த பக்கம் வந்து விடாதே என்று சொல்லி அவனை நள்ளிரவு நேரத்தில் அனுப்பி வைக்கிறாள். அந்த இளம் பெண்ணின் அன்பில் நனைந்த இளைஞன் அதோடு திருட்டு தொழிலுக்கு தலை முழுக்கு போடுகிறான்.
அதே சமயம், முதிய தம்பதிகள் கொலை வழக்கில் யாரையாவது கைது செய்தாக வேண்டிய கட்டாயம் போலீசுக்கு. இந்த நேரத்தில் தனது திருமணத்துக்கு தாலியும் கூரைப்பட்டும் எடுத்துக்கொண்டு காதலி வீட்டுக்கு செல்லும் நாயகன் போலீஸ் கண்ணில் பட… கொலைப் பழியை அவன் மீது சுமத்த அவன் ஒப்புக் கொள்ளும் வகையில் போலீஸ் அவனை அடித்து துவைக்க…
இப்போது அவன் காதல் போலீஸ்க்கு தெரிய வர…
மந்திர பாட்டி குடிசைக்கு தீ வைத்து அவளை எரித்து விடும் போலீஸ், அவன் காதலியை மட்டும் ஊர் பெரிய மனிதனுக்கு
விருந்தாக்க அனுப்பி வைக்கிறது.
இந்த நேரத்தில் போலீசின் சதி தெரிந்து திருந்திய திருடன் எடுக்கும் ஆவேச அதகளம் கிளைமாக்ஸ்.
திருடனாக வரும் சேது யதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் நாயகிக்குமான காதல் மலரும் இடங்கள் படத்தின் ரசனை பகுதியாகி விடுகிறது.
காதலிக்கு ஆபத்து என்று தெரிய வந்தபோது அதிரடி அவதாரத்திலும் ஏற்ற நடிப்பை தந்திருக்கிறார்.
நாயகி சம்ரிதி, கிராமத்து காதலியாக துணிச்சல் மிக்க பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். தனது காதலை பாட்டி ஏற்றுக் கொண்டதும் பளிச்சென்று அந்த முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை எட்டிப் பார்க்கிறதே, அடடா,அடடா…
கொடூர இன்ஸ்பெக்டராக அந்த மொட்டை மனிதர் பொருத்தமான தேர்வு. ஊர் பெரிய மனிதர் பி.எல். தேனப்பன் வில்லத்தனத்தில் தேர்ந்த நரியாக வலம் வருகிறார்.
ஒரு இரவில் நடந்த திருட்டு, கொலை அதனைத் தொடர்ந்து திருடனின் காதல், அந்தக் காதலை குழி தோண்டி புதைக்க முற்படும் போலீஸ் என்று போகும் கதையில் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடிந்தது பலவீனம்.
அமர்கீத்தின் இசையில் பாடல்கள் சுக ராகம். குறிப்பாக ‘என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச’ பாடல் இனி காதலர்களின் தேசிய கீதமாகி விடும்.பால பழனியப்பனின் கேமரா கதையோடு இணைந்து பயணித்திருக்கிறது.
ஏ. பி.ஜி. ஏழுமலை இயக்கி இருக்கிறார். உண்மையான காதல் திருடனையும் திருந்த வைக்கும் என்பதை காட்சிப்படுத்தியவிதம் அருமை. அதிகாரமிக்கவர்கள் கையில் எளியவர்கள் சிக்கினால் என்னாகும் என்பதையும் நெஞ்சம் பதை பதைக்க சொல்லி இருக்கிறார். மந்திர பாட்di என்றெல்லாம் பில்டப் கொடுத்து விட்டு அந்த பாட்டி கடைசி வரை எந்த மந்திரமும் செய்யவில்லை என்பது கதைக்கு நேர்ந்த சோகம். மையல், சோக ரசம்.
