நரி வேட்டை – திரை விமர்சனம்
சிறு வயதில் தந்தையை இழந்த டோவினோ தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். கல்லூரி படிப்பை நிறைவு செய்தவர் படிப்புக்கேற்ற வேலையில் மட்டுமே சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வங்கியில் வேலை செய்யும் பிரியம் வதா மீது பிரியமும் கொள்கிறார். சரியான வேலைக்காக காத்திருக்காமல் கிடைக்கிற வேலையை செய்து வா. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் போது அதை செய் என்கிறார் காதலி. அம்மாவும் அதையே வலியுறுத்த, அந்த நேரத்தில் ரிசர்வ் போலீஸ் வேலை தேடி வர… வேண்டா வெறுப்பாக வேலையில் சேர்கிறார்.
எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே படிப்பினை தொடர்கிறார்.
இந்த சமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் உயர் போலீஸ் அதிகாரி சேரன் தலைமையில், அங்கு ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்படுகிறது.
போராட்டம் நாட்கணக்கில் செல்ல, போனால் போகிறது என்று ஒரு மாதம் கழித்து மந்திரி ஒருவர் வேண்டா வெறுப்பாக வந்து அந்த மக்களை சந்திக்கிறார். அப்போது அரசு ஏற்கனவே சொன்னபடி வீடு கட்டி தருவோம் என்று மந்திரி பழைய பல்லவியையே கூற, மலைவாழ் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. வீடு தரும் வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள் அவர்கள்.
பிறகு அரசு தரப்பில் வேறு வியூகம் வகுக்கப்படுகிறது.
இந்த மலை வாழ் மக்களை தூண்டி விடுவதே அங்கு மறைந்து வாழும் மாவோயிஸ்டுகள் தான் என்று புதிய கதை கிளப்பி விடுகிறது போலீஸ்.
அவர்களை தேடிப் போகும் போலீசாரில் ஏட்டு ஒருவர் உயிரிழந்த விலையில் கண்டு பிடிக்கப்பட… இதைத் தொடர்ந்து லத்தி சார்ஜ். அதன் பிறகு துப்பாக்கி சூடு என்று போலீஸ் அந்த மலைவாழ் மக்களை வேட்டையாடத் தொடங்க, இது போலீசாரின் திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொள்ளும் டோவி னோ தாமஸ், அந்த மலைவாழ் பகுதி மக்களுக்கு தன் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.
போலீசுக்கு போலீசே எதிரியா? சும்மா விடுமா போலீஸ்? இப்போது போலீசின் மொத்த கோபமும் டோவீனா தாமஸ் மீது திரும்ப…
இனி என்ன ஆகிறது? என்பதை யதார்த்தம் மீறாமல் திரைக்கு தந்து இருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக அநீதி பொறுக்காத போலீஸ்காரராக டோவீனா தாமஸ் அந்த கேரக்டருக்குள் அப்படி பொருந்திப் போகிறார். வேலை வெட்டி இல்லாத நேரத்தில் பிரியம் வதாவு டன் காதல், காக்கி சட்டை அணிந்த பிறகும் மனிதத்தை தூக்கி எறியாமல் இருப்பது, மேலதிகாரியாக இருந்து நண்பனாக மாறிப் போன போலீஸ் ஏட்டு சுராஜ் வெஞ்சர மூடு சாவு பின்னணியில் இருக்கும் அரசியல் தெரிந்து துடிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை புதிது புதிதாக பதிவு செய்து கொண்டே வருகிறார்.
கதையின் திருப்பு முனை கேரக்டரில் போலீஸ் ஏட்டாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் புதிய பரிமாணம் தொட்டிருக்கிறார். சக போலீஸ் டோனோ தாமஸ் இடம் அவர் காட்டும் அன்பும் அக்கறையும் எந்த இடத்திலும் நடிப்பாக தோன்றவில்லை. டோவினோவிடம் அவர், மிலிட்டரி துப்பாக்கிக்கும் போலீஸ் துப்பாக்கிக்கும் இடையே உள்ள வித்தியாசம் சொல்லும் இடத்தில் அரங்கு அதிர கரகோஷமும் வாங்குகிறார். டோவினோவின் காதலியாக வரும் பிரியம் வதா நடிப்பிலும் அத்தனை அழகு.
உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் அரசின் கட்டளை ஏற்று நரித் தந்திரம் செய்யும் இடத்தில் தேர்ந்த வில்லனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் பாடல்கள் உணர்ச்சி பூர்வமானவை. கிளைமாக்ஸ்சில் நடக்கப் போகும் விபரீதத்தை
முன்னதாகவே கோடிட்டு காட்டும் பின்னணி இசை அப்போதே நெஞ்சுக்குள் திகில் விதைத்து விடுகிறது
விஜயின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் போராட்ட களத்தை நேரில் பார்ப்பது போல் படம் பிடித்து காட்டியிருக்கிறது.
உரிமைக்காக போராடும் மக்களை நரித்தனமாக வேட்டையாடும் அரசு, அதை எதிர்த்து தனி ஒருவனாக போராடும் காக்கி இளைஞன் என்ற சிக்கலான கதைக் களத்திற்குள் மூழ்கி முத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர்.
