திரை விமர்சனம்

ஏஸ் – திரை விமர்சனம்

மலேசியாவில் நடக்கும் கதை. காதலியின் பணத் தேவைக்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் நாயகன், அதன் பின் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து காதலியை கைப்பிடிக்க முடிந்ததா என்பது அதிரடி களத்தில் சொல்லப்பட்ட நகைச்சுவை மேளா.

வேலை தேடி மலேசியா சென்று யோகி பாபு தயவில் கிடைத்த வேலையில் அமரும் நாயகன் விஜய்சேதுபதிக்கு எதிர்வீட்டு நாயகி ருக்மணிவசந்த் மீது கண்டதும் காதல். காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுத்து கவர நினைத்தவர், அதற்காக பிரபல ரவுடியுடன் சூதாடி கடன் படுகிறார். கடனை அடைக்க வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். இந்தக் கொள்ளை விவகாரம் காதலிக்கு தெரிந்த நிலையில் காதலியே போலீசில் காட்டிக் கொடுத்தாரா? அல்லது வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நாயகனை மலேசியா காவல்துறை கண்டு பிடித்ததா என்பதை கலகல பாணியில் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக வரும் விஜய் சேதுபதிக்கு அளவுச் சட்டை போல் அந்த கேரக்டர் அப்படி பொருந்திப் போகிறது அப்பாவி முகத் தோற்றத்தில் பெரிய ரவுடியிடம் மாட்டிக் கொண்ட நிலையில் அவரது முக பாவங்கள் நிஜமாகவே ஆசம். சண்டைக் காட்சியில் கூட புது ஸ்டைலில் ஜமாய்க்கிறார். காதலியுடன் மனதளவில் நெருங்கி செல்லும் தருணங்கள் ஒவ்வொன்றும் நடிப்புக் கவிதை.

நாயகி ருக்மணி வசந்த் அழகான வரவு. நடிப்புக்கும் நல்வரவு. தன்னை ஒரு ஆண் பின் தொடர்கிறான் என்பது தெரிய வந்ததும் காட்டும் அந்த முறைப்பு, நடிப்பில் அத்தனை அழகு.
விஜய் சேதுபதியின் நண்பனாக யோகிபாபு வரும் நேரம் எல்லாம் காமெடி நேரமாகிறது. அவர் வாயை திறந்தாலே சிரிப்பு சிக்சர் தான்.
ரவுடியிடம் வசமாக சிக்கிய நிலையில் உண்மையை உளறிக்கொட்டும் இடத்தில் சிரிப்பில் தியேட்டர் தெறிக்கிறது.
நாயகனின் தோழியாக திவ்யா பிள்ளை, வில்லங்க போலீஸ் அதிகாரியாக பப்லு, பார்வையிலே பயமுறுத்தும் வில்லனாக கேஜிஎஃப் அவினாஷ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

கிரன்பக்தூர் ராவத் ஒளிப்பதிவில் மலேசியா இத்தனை அழகா… வியக்கத் தோன்றுகிறது.ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் பரம சுகம்.சாம்.சி.எஸ்.சின் பின்னணி இசை காட்சிகளோடு இணைந்த மாயாஜாலம்.எழுதி இயக்கியிருக்கிறார் ஆறுமுக குமார். நாயகன் கேரக்டரில் இயக்குனர் வைத்திருக்கும் புதுமை காட்சிக்கு காட்சி படத்தை சுவாரசியமாக்கி விடுகிறது.வங்கி கொள்ளைக்கு பிறகு படத்தின் வேகம் நிஜமாகவே ஜெட் வேகம்.

–ஏஸ், அதிரடிக்குள் ஒரு அழகான காமெடி கலாட்டா.