ஸ்வீட் ஹார்ட் – திரை விமர்சனம்
சிறு வயதில்தன் தாய் மூலம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குறிப்பாக திருமண வாழ்க்கை மீது அப்படி ஒரு கசப்பு.
ஒரு சூழலில் அவருக்கும் காதல் வருகிறது ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷுக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை.இதற்கிடையே நெருக்கமான நேசத்தில் காதலி கர்ப்பம் ஆகிறார். காதலனோ கருவை கலைக்க கட்டாயப்படுத்துகிறார். ஆனால் கோபிகாவுக்கோ குழந்தை பெற்றுக் கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விருப்பம். இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் முட்டிக் கொள்கிறது. இந்த மோதலில் காதலியின் விருப்பம் நிறைவேறியதா? காதலன் பிடிவாதம் வென்றதா? என்பதை சூடு குறையாத சுவை விருந்தாக பரிமாறி இருக்கிறார்கள்.
நாயகனாக ரியோ ராஜ். தனக்கான வாழ்க்கை காதலுடன் நெருங்கி வரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாதமனநிலையை நடிப்பில் அழகாக பிரதிபலிக்கிறார். காதலி கர்ப்பம் ஆனதும் கருவை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்தும் இடத்தில் அவருக்கான பதட்டத்தை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போகும் இடங்கள் ரசனைக்கானவை. என்றாலும் சோகத்தில் முகத்தை ஒரே மாதிரி வைத்துக் கொண்டு இருப்பதை தவிர்க்கலாம்.நாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், கர்ப்பமான நிலையில் காதலன் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும்
அருணாச்சலேஸ்வரன் படத்தின் இறுக்கமான சூழலில் நகைச்சுவை தூவி கலகலப்பாக்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயன்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் நாயகனின் மனதை மாற்றும் அந்த கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி ஒட்டுமொத்த கதைக்குமான ஜீவன். அதை சரியான விதத்தில் கையாண்டு ரசிகர்களின் ஸ்வீட் ஹார்ட் ஆகி இருக்கிறார் இயக்குனர்.