ராபர் – திரை விமர்சனம்
வழிப்பறி கொள்ளையர்களால் பறி போகும் உயிர்களுக்கு ரத்தமும் சதையுமாய் நீதி சொல்லும் படம். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்தன. இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அதையே தொழிலாக கொண்டவர்கள் இல்லை என்பதுதான் அப்போது கிடைத்த அதிர்ச்சி செய்தி. வழிப்பறி திருடர்கள் மக்களோடு மக்களாக இருந்ததால் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இந்தக் கதையிலும் அப்படி ஒரு திருடன் தான் நாயகன்.
கிராமத்திலிருந்து சென்னை வரும் சத்யா, இங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்றவர்களைப் போல் பெண்களிடம் தாமும் பழக வேண்டுமானால் வேலையில் சம்பாதிக்கிற பணம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வரும் அவர், பணிக்கிடையே பார்ட் டைமாக வழிப்பறியையும் தொடர்கிறார்.
இதே போல் ஐடியில் வேலை செய்து கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் டேனி கூட்டாளியிடம், வழிப்பறி செய்த நகைகளை கைமாற்றி பணம் வாங்குகிறார்.
செயின் பறிப்பில் சத்யாவின் சாமர்த்தியம் அவருக்கு சாதகமாக அமைய, அலுவலகத்திலேயே ஒரு திடீர் காதலி அமைகிறார். அவள் கேட்ட நகைகளை கொடுத்து அவளை அவ்வப்போது பரவசப்படுத்துகிறார்.இந்நிலையில் ஒரு பெண்ணிடம் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் செல்லும்போது, அந்தப் பெண் சாலையில் விபத்துக்குள்ளாகி இறந்து விடுகிறார்.
செயின் பறிப்பால் உயிரிழந்த பெண்ணின் தந்தை ஜெயப் பிரகாஷ் தன் மகளின் சாவுக்கு காரணமானவனை கண்டுபிடித்து தன் கையால் கொல்ல எண்ணுகிறார். அதற்கு அவருக்கு போலீஸ் பாண்டியன் உதவுகிறார். இவர்களிடம் சத்யா சிக்குகிறார். அவரை உயிரோடு விட்டார்களா? என்பது பரபரப்பு கிளைமாக்ஸ்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் நடந்து கொண்டிருக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை காட்சிகளாக திரையில் காட்டும் போது நமக்கே உதறுகிறது. அத்தனை எதார்த்தமாய் திரையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
செயின் பறிப்பு சம்பவங்கள் எப்படி நடக்கிறது? அதை செய்பவர்களின் பின்னணி என்ன? என்பதை விலாவாரியாக காட்சிப்படுத்திருக்கும் டைரக்டர் எஸ் எம் பாண்டிக்கு ஒரு சபாஷ்.
மெட்ரோ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ள சத்யா, இதில் ஹீரோவாகி இருக்கிறார். அந்த அப்பாவி முகம் வழக்கமான கொள்ளையர்களிடம் இருந்து அவரை மாறுபடுத்தி காட்டி இரு க்கிறது. அதுவே அவரது நடிப்பின் வெற்றியும் கூட. ஜெயபிரகாஷ் அண்ட் கோவிடம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அந்த நேரத்திலும் பேரம் பேசி அவர்களிடம் ரிசல்ட் எதிர்பார்க்கிற அந்த நிமிடம் நிஜமாகவே
திக் திக். நடிப்பை பொறுத்தவரை அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டே அவர் செய்யும் அலப்பறைகள் குறிப்பாக வழிப்பறி செய்யும் போது அவர் நடத்தும் அதிரடி தாக்குதல்கள் ஒரு தேர்ந்த நடியாக சத்யாவை நமக்குள் கொண்டு வந்து விடுகிறது.
வழிப்பறி கேரக்டருக்கென்றே நேர்ந்து விட்ட மாதிரி டேனி போப்பும் தனது பங்கிற்கு மனதையும் சேர்த்து கொள்ளையடிக்கிறார்
ஜெயிலில் கைதியாக இருந்தபடி முன் கதை சுருக்கம் சொல்லும் கேரக்டரில் சென்ராயன் தனக்கான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
மகளுக்காக பலி வாங்க துடிக்கும் அப்பா ஜெயபிரகாஷின் நடிப்பும் துடிப்பும் வேறு லெவல்.சத்யாவின் பாசமிகு அம்மாவாக தீபா சங்கர், போலீசாக பாண்டியன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் அழுத்தமாக பதிந்து போகிறார்கள்.
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் வழிப்பறி காட்சிகள் நிஜமாகவே திகில் ஊட்டுகின்றன. ஜோகன் சிவனேஷ் இசையில் பாடல்கள்ரசிக்கலாம். பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.
வழிப்பறியால் ஏற்படும் குடும்ப சிதைவை ஸ்பென்ஸ் திரில்லர் பின்னணியில் தந்த இயக்குனர் எஸ்.எம். பாண்டி, தமிழ்த் திரைக்கு நல்வரவாகி இருக்கிறார். மெட்ரோ வெற்றிப் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் திரைக்கதை படத்தின் கூடுதல் பலம்.
இந்த ராபர் கொள்ளை அடிப்பது ரசிகர்களின் மனதை.