நிறம் மாறும் உலகில் – திரை விமர்சனம்
தனது காதலை அங்கீகரிக்காத அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் தோழியின் ஊருக்கு பயணமாகிறார். ரயிலில் அவரை சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, லவ்லினிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். நான்குமே தாயின் பெருமைக்கானது.
முதல் கதையில் அம்மா பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதாவாக நட்டி வருகிறார். அவரைப் போட்டுத்தள்ள துடிக்கும் கேரக்டரில் வரும் சுரேஷ் மேனன் தமிழ்நாட்டில் இருந்து ஓடிவந்த கிராமத்து காதல் ஜோடிகளை இதற்கென பயன்படுத்திக் கொள்கிறார்.
காதலன் கத்தி நட்டியை பதம் பார்த்ததா? காதல் ஜோடிகள் அங்கிருந்து உயிருடன் தப்ப முடிந்ததா?
பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, அப்பா கதை இரண்டாவது. (நான்கு கதைகளிலும் படு செயற்கையான கதை இதுதான்.) மூன்றாவது கதை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்றத் துடிக்கும் மகன் பற்றியது. தாயை காப்பாற்ற ஆபரேஷனுக்கு தேவையான பணம் திரட்ட துடிக்கும் மகனுக்கு ஒருவரை கொலை செய்தால் பணம் தருவதாக தாத்தா சொல்ல, மகன் கொலை செய்தானா, தாயின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பது சஸ்பென்ஸ்
நாலாவது கதை புதிதாக கிடைத்த அம்மா என்ற உறவுக்காக தனது காதலை தூக்கி எறியும் இளைஞர் பற்றியது. நான்கு கதைகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி, பாரதிராஜா – வடிவுக்கரசி, ரியோ ராஜ், சாண்டி என அனைவரும் கிடைத்த கேரக்டர்களில் வெளிப்படுகிறார்கள். டிக்கெட் பரிசோதகராக வந்து லவ்லின் சந்திரசேகருக்கு புத்திமதி சொல்லும் கேரக்டரில் யோகி பாபு அந்த குணசித்திரத்தில் அசத்துகிறார்.
காதல் விஷயத்தில் ஊரின் கட்டுப்பாட்டை மீறிய மகளை கொல்ல தந்தை ஆடுகளம் நரேன் கையில் அரிவாளை கொடுத்து வெட்டி போடச் சொல்கிறது ஊர். அந்த இடத்தில் ஆடுகளம் நரேன் சிறந்த நடிகராக நிரூபிக்கிறார். உயிருக்கு போராடும் அம்மாவை காப்பாற்ற ஆயுதம் ஏந்தும் மகனாக ரியோ ராஜ் நடிப்பில் கவனிக்க வைக்கிற இன்னொருவர் .
ஆதிரை, கனிகா, லவ்லின்,ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி,
ஐரா கிருஷ்ணன் என நடித்தவர்களும் தங்கள் கேரக்டர்களில் நிலைக்கிறார்கள்.இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. ரகம்.
பிரிட்டோ ஜே.பி. எழுதி இயக்கி இருக்கிறார் நான்கு கதைகளிலும் தாயின் பேரன்பை மேன்மைப்படுத்திய இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருந்தால் படம் வேறு லெவலுக்கு பேசப்பட்டிருக்கும்.
ஆட்டோ டிரைவர் சாண்டி சம்பந்தப்பட்ட அம்மா கதையில் காட்டிய திரைக்கதை நேர்த்தியை மற்ற கதைகளிலும் காட்டி யிருக்கலாம். என்றாலும் பெத்தவங்களை மறக்காதீங்க என்ற மெசேஜுக்காக இயக்குனரை பாராட்டலாம்.