கிங்ஸ்டன் – திரை விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி மீன் பிடிக்க சென்றவர்கள்
பிணமாக கரை ஒதுங்குவார்கள். இதற்கு இடையே அந்த ஊரின் கன்னிப்பெண்களும் அவ்வப்போது காணாமல் போகிறார்கள்.
உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்) இந்த மர்மத்தை கண்டறிய நண்பர்களோடு துணிச்சலாக கடலுக்குள் படகில் பயணப்படுகிறார். அவர் கடல் மர்மத்தை கண்டு பிடித்தாரா? உயிரோடு கரைக்கு திரும்பினாரா? என்பது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும் தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போது படம் வேகம் பிடித்து விடுகிறது.
கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குபடபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன. மேற்கொண்டு நகரும் ஊரில் யாருக்கு என்ன தேவை என்றாலும் பணத்தை அள்ளிக் கொடுக்கும் தாதா தாமஸ் கதாபாத்திரம் படத்தின் முதல் பாதியை சிறப்பாக தாங்குகின்றன. பிளாஷ்பேக்கில் வரும் கிங்ஸ்டனின் தாத்தா சாலமன் (சேத்தன்) – போஸ் (அழகம்பெருமாள்) இடையேயான தங்கக் கடத்தல் காட்சிகள் இருவர் நடிப்பிலும் நிமிர்ந்து நிற்கிறது
கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் தனது பெஸ்ட்டை வழங்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் காதலியாக வரும் திவ்யபாரதி நடுக்கடலுக்குள் ஆவியை பார்த்து அலறும் இடத்திலும் மட்டும் நடிக்கிறார். வில்லத்தன நடிப்பில் கவர்கிறார் சேத்தன். அழகம்பெருமாள், தாதா ஷபு மோன், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் கொடுத்த பாத்திரங்களில் நிலைத்து நிற்கிறார்கள்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் ஆழ்கடல் காட்சிகள் குறிப்பாக ஆவி- மனிதர் சண்டைக் காட்சிகள் சிறப்பு.ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும்கவனம் ஈர்க்கிறது.
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார்மிரட்டலான கடல் சாகச த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம், வலுவற்ற திரைக்கதையால் சற்று தடுமாறுகிறது. என்றாலும் கடல் வழி கதையை புதிய கோணத்தில் சொல்ல முயன்ற இயக்குனரை அதற்காக வரவேற்கலாம்.