படவா – திரை விமர்சனம்
ஊருக்கு ஆகாதவன் அந்த ஊருக்கே சிறப்பு சேர்த்த கதை.எக்காரணம் கொண்டும் வேலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருப்பவர் விமல். வேலை செய்யப் போகிறவர்களையும் தடுத்து விடுவார். சூரியுடன் சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, நள்ளிரவில் பட்டாசு வெடித்து ஊர் மக்களை பீதி ஆக்குவது, கண்ணில் பட்ட பொருட்களை திருடி விற்பது என ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த ஊருக்கே அவரால் தலைவலி. சொந்த அக்கா வீட்டிலேயே ஏமாற்றி பணத்தை ஆட்டை போடுவதால் அக்கா குடும்பமும் அவரைப் பார்த்தால் அலறுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பில் அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.விமலை கண்டாலே பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை அவரை மாலை போட்டு வரவேற்கிறார்கள். பார்த்தாலே கரித்துக் கொட்டும் அக்கா கூட இம்முறை தம்பியை வரவேற்று உச்சி முகூர்கிறார். இதெல்லாம் போதாது என்று அவரை பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கிராம மக்களின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?, அதன் பிறகு விமலிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சொல்லி இருப்பதே இந்த படவா.வெட்டியாக ஊர் சுற்றுவது, ஊருக்கு வெர்டினரி டாக்டராக வரும் நாயகியை கண்டதும் காதல் கொள்வது, வில்லனை எதிர்ப்பது என்று முதல் பாதி முழுக்க தனது காமெடி சாம்ராஜத்தில் வியாபித்து நிற்கிறார் விமல். பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு அவரது நடவடிக்கைகள் வேறு ரகம். குறை கேட்க வந்த மாவட்ட கலெக்டரிடம், எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டும் என்று கேட்டு கலெக்டர் எரிச்சலை சம்பாதிப்பவரை அதே கலெக்டர் வியந்து பாராட்டுவது வரை நடிப்பில் செம பர்பாமென்ஸ் கொடுக்கிறார். விமலின் நண்பராக வரும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுக்க சிரிக்க வைக்கிறார்.
வெர்டினரி டாக்டராக வந்து விமலின் காதலுக்கு உள்ளாகும் ஷ்ரிதா ராவ், நடிப்புக்கு புது வரவு என்றாலும் நல்வரவு. விவசாயத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கேரக்டரில் சூப்பர்குட் சுப்பிரமணி பிரகாசிக்கிறார்.
விமலின் அக்காவாக தேவதர்ஷினி, மாமாவாக நமோ நாராயணன், சூரியிடம் பால் மாடு வேண்டுமென்று அபிநயித்து காட்டும் டெலிபோன் ராஜ் தங்கள் பங்குக்கு காமெடியில் கலக்குகிறார்கள்.
வில்லனாக வரும் கே.ஜி.எப் ராமச்சந்திர ராஜு விமலிடம் மோதும் காட்சிகள் சூடானவை.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் இன்னொரு தூண். எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா, முதல் பாதியில் கலகலப்பு மறு பாதியில் சமூக பொறுப்பு என்ற பின்னணியில் கதை அமைத்து இயக்கி இருக்கிறார். பொறுப்பு என்று வந்த பிறகு நாயகன் வாழ்வில் ஏற்படும் திருப்பம் கிளைமாக்ஸ் வரை ரசிகனை ஈர்த்து கொள்கிறது.
இந்த படவா ரசிக்கத் தக்கவன்.