நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -திரை விமர்சனம்
காதல் தோல்வியால் திருமணத்தை தவிர்க்கும் பிரபுவை (பவிஷ் நாராயண் ) வற்புறுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே போன பிறகுதான் அவர்கள் பார்க்கப் போன பெண் அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) என்று தெரிய வருகிறது. இருவரும் பேசும்போது தோற்றுப்போன தன் முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறான் பவிஷ். அதைக் கேட்டு முடித்ததும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு திருமண பேச்சுக்கு வரலாம் என்கிறார் பள்ளிக்கால தோழி.
இதேநேரத்தில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிகை வர, நீ போய் உன் பழைய காதலியை பார்த்து விட்டு வா என்கிறாள் தோழி.
நண்பனுடன் நிலா திருமணத்திற்கு செல்லும் பிரபுவுக்கு அங்கே நடந்தது என்ன? என்பதை கலகல விறுவிறு பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
அறிமுக நாயகன் பவிஷை பார்க்கும்போது துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் காலத்திய தனுஷை பார்க்க முடிகிறது. ( தனுஷின் அக்கா மகன் என்பதால் இந்த முக ஜாடையும் இந்த படத்துக்கு ஒரு பிளஸ் தான்.) அனிகா தொடர்பான காதல் காட்சிகளில் நடிப்பது தனுஷா அல்லது பவிஷா என்ற சந்தேகம் நமக்கே பல இடங்களில் வருகிறது.உடல்மொழி, குரல் என அனைத்திலும் அப்படியே மாமாவின் சாயல். ஆனால் சோக காட்சிகளுக்கு மட்டும் இவர் ட்ரைனிங் எடுக்க வேண்டி வரும்.
பவிஷின் முன்னாள் காதலியாக அனிகா சுரேந்திரன், மணப்பெண் போஸ்ட்க்கு காத்திருப்பவராக பிரியா பிரகாஷ் வாரியர். இருவரில் எதார்த்த நடிப்பில் முந்துகிறார் பிரியா பிரகாஷ் வாரியர். குறிப்பாக காதலி கல்யாணத்துக்கு கட்டாயம் போ நன்றி சொல்லும் இடத்தில் கண்கள் வரை நடிக்கிறது.
தனது முன்னாள் காதலன் கெட்டவன் இல்லை என்று தெரிந்து கொள்ளும்போது அனிகாவிடம் வெளிப்பட வேண்டிய எமோஷன் ஆக்சனின் போதாமை அந்தக் காட்சியின் வீரியத்தை குறைத்து விடுகிறது.
நாயகனின் நண்பராக வரும் மாத்யூ தாமஸ் முழு படத்துக்கும் கிடைத்த காமெடி வரம்.
இரண்டாம் பாதியில் வரும் ரம்யா ரங்கநாதன் பவிஷிடம் நட்பு பாராட்டும் இடங்கள் கவிதை.
வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா கதூன் கலகலப்பான காதல் ஜோடியாக வந்து முழு படத்துக்கும் காமெடி எனர்ஜி தருகிறார்கள்.நாயகியின் அப்பாவாக சரத்குமார், நாயகனின் பெற்றோராக ஆடுகளம் நரேன்- சரண்யா பொன்வண்ணன் கதை ஓட்டத்துக்கு உதவுகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். எழுதி இயக்கிய தனுஷ், பவர் பாண்டி ராயன் படங்களைத் தொடர்ந்து இயக்கத்தில் இந்தப் படத்திலும் ஜெயித்திருக்கிறார். காதல் தோல்வி களத்தை கலகலப்பு மேளாவாக ரசிக்கும்படி தந்ததில் முதல் வரிசை இயக்குனர்கள் பட்டியலில் தனுஷும் இடம் பிடித்து விடுகிறார்.
முழு நிலா.
