ட்ராகன் – திரை விமர்சனம்
ப்ளஸ் டூ வில் 96 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ராகவன் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கே படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கெத்து காட்டுவதில் மட்டும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார்.
இதனால் நான்காம் ஆண்டு கல்லூரி முடிக்கும் காலகட்டத்தில் 48 அரியஸ் வைத்து வெளியேறுகிறார். இந்தக் கல்லூரியில் அவர் சம்பாதித்தஒன்று காதல். நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் காதலி அனுபமா பரமேஸ்வரன்..
கல்லூரியில் இருந்து விடைபெற்ற நேரத்தில் காதலி அவனை சந்திக்கிறாள். பெற்றோர் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கலக்கத்துடன் கூறுகிறாள். ஆனால் அதை சட்டை செய்யாத நாயகன் வார்த்தைகளால் காதலியை காயப்படுத்துகிறான். பதிலுக்கு காதலியும், ‘உனக்கு படிப்பும் இல்லை. வேலையும் இல்லை. வருங்கால கணவருக்கு மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க துப்பில்லாத உன்னைப் பற்றி என் பெற்றோரிடம் எப்படி சொல்வது? என்று கேட்டு கண்ணீருடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
காதலி திருமணம் நடந்து முடிகிறது. இப்போதும் நாயகன் திருந்திய பாடில்லை. தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ. 20000 சம்பளத்தில் வேலை என்று பொய் சொல்லி பெற்றோரை ஏமாற்றுகிறான்.
ஆனாலும் முன்னாள் காதலியின் கணவர் வாங்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாயாவது அதிகமாக சம்பாதிக்க வேண்டும். இந்த கோணத்தில் வேலை தேடுகிறார். இந்நிலையில் பிரபல அலுவலகத்தில் லட்சங்களில் சம்பளம் என்பதை அறிந்தவர், வேலைக்கு விண்ணப்பிக்க டிகிரி தடையாக இருப்பதை உணர்கிறார். அப்போது பணம் கொடுத்தால் முறைகேடாக டிகிரி சான்றிதழ் தரும் நிறுவனம் பற்றி தெரிய வர… பணம் கொடுத்து டிகிரி வாங்குகிறார். இன்டர்வியூவில் தேர்வாகி மாதம் ஓண்ணே கால் லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்க…
இப்போது புது வீடு. தோற்றத்தில் புது தேஜஸ் என வாழ்க்கை மாற…பெரிய இடத்து சம்பந்தமும் கூடி வருகிறது. அப்படியானால் இனி ராஜ வாழ்க்கை தான் என்று தானே தோன்றும். அதுதான் இல்லை. மூன்று மாதத்தில் 48 அரியரையும் கிளியர் செய்தால் மட்டுமே உன் வேலை நீடிக்கும். அப்படி அரியரை கிளியர் செய்ய மறுத்தால் இப்போதே உன் அலுவலகத்தில் உண்மையை சொல்லுவேன் என்று ஒரு குண்டை தூக்கி போட…
அதிர்ந்து போகும் நாயகன் என்ன முடிவு எடுக்கிறான்? மீண்டும் கல்லூரிக்கு படிக்க வந்தானா? அவன் வேலை நீடித்ததா? பணக்கார சம்பந்தம் திருமணத்தில் முடிந்ததா? என்பது ஊகிக்கவே முடியாத கிளைமாக்ஸ்.
நாயகனாக பிரதீப் ரங்கநாதன், கெத்து காட்டும் கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். காதலி அனுபமா பரமேஸ்வரனிடம் ஆத்திரமாகும் இடத்திலும், பிற்பகுதியில் கல்லூரி பேராசிரியரான அவரது அன்புக்கு பாத்திரமாகும் இடத்திலும் நடிப்பில் அவர் காட்டும் மாறுபாடு நேர்ந்த நடிகராகவும் அவரைநிலை நிறுத்துகிறது. குற்ற உணர்வில் உடைந்து நொறுங்கும் இடத்திலும் நடிப்பில் பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார். இவருக்கும் பிரின்ஸ்பால் மிஷ்கி னுக்குமான அந்த ‘நீயா நானா போராட்டம்’ விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத சுவாரசிய காட்சிகள்.
நாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கு அவரது நடிப்புக் கேரியரில் இது முக்கியமான படம். கல்லூரி பேராசிரியை ஆன பிறகு நாயகனிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் நடிப்பில் வேறு லெவல். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் காயடு லோஹர், அழகான நடிப்பில் கவர்கிறார்.
விஜே சித்து, ஹர்ஷத் கான் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். கல்லூரி முதல்வராக மிஷ்கின், அந்த கேரக்டரில் நடிப்பில் ஆழமான தடம் பதிக்கிறார். இவருக்கும் நாயகனுக்குமான மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் அண்டர்ஸ்டாண்டிங்காக மாறும் இடங்கள் அழகானவை.
கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகிறார்கள்.லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள்
ரசனை.ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கேமரா பிரமாண்டமான காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கல்வியின் முக்கியத்துவத்தை, அதை போர்ஜரி செய்தால் ஏற்படும் விளைவுகளை சுவாரசிய காட்சிகளாக அடுக்கியதில் இந்த டிராகன் சுலபத்தில் மனதில் இடம் பிடித்து விடுகிறான்.
கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
