திரை விமர்சனம்

ராமம் ராகவம்- திரை விமர்சனம்

நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது.

மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர…

ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்? மகனின் எதிர்காலம் என்ன ஆகிறது என்பது ரத்தமும் சதையுமான திரைக்கதை.

தப்புக்கு மேல் தப்பு செய்து கொண்டிருக்கும் மகனை அடித்து திருத்தப் பார்க்கும் அப்பா. அதே நேரம் அவன் திருந்தி விட மாட்டானா என்று உள்ளுக்குள் ஏங்கித் தவிக்கும் அப்பா. இந்த இரு வேறு நிலை நடிப்பிலும் இப்படியான பிள்ளைகளை பெற்ற அப்பாக்களின்
மனநிலையை அச்சு
பிசகாமல் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் சமுத்திரக்கனி.
மகனாக நடித்திருக்கும் தனராஜ் , அப்பாவை எதிரியாக பார்க்கும் மகன்களை நடிப்பில் வார்த்தெடுத்து இருக்கிறார். தன் திருமணம் அப்பாவால் தடைப்பட்டது முதல் படிப்படியாக அப்பாவை வெறுக்கும் மகனை திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.
அம்மா கேரக்டரில்
வரும் பிரமோதினி கணவருக்கும் மகனுக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த கேரக்டரை செவ்வனே செய்து இருக்கிறார்.
நாயகியாக ஒரு மோக்ஷாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும், வந்த வரை நிறைவு.
லாரி டிரைவராக வரும் ஹரிஷ் உத்தமன் பணத்துக்காக கொலை செய்ய ஒப்புக் ஒப்புக்கொள்ளும் காட்சியிலும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் நடிப்பில் இரு வேறு முகம் காட்டுகிறார்.

சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் சிரிக்க வைக்கிறார்கள்.
வில்ல முகம் காட்டும் சுனில் இந்தப் படத்தில் அதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
அருண் சிலுவேரு பின்னணி இசை கதையை நகர்த்த பெரும் பங்கு செய்கிறது. பாடல்கள் காட்சிகளை கனமாக்குகின்றன.

தனராஜ் கொரனானி இயக்கி இருக்கிறார். கண்டித்து திருத்துப் பார்க்கும் அப்பாவை பரம எதிரியாக கருதும் மகன் என்ற கதைக் களத்தில் புகுந்து விளையாடிருக்கிறார். காட்சிகளில் உணர்ச்சிக் குவியல். கிளைமாக்சில் அந்த எதிர்பாராத ட்விஸ்ட் படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது.

அப்பா பாசம். மகன் பாஷாணம் என்ற ஒரு வரி கதை, இயக்குனரின் திரையாளுமையில் ஜொலிக்கும் வைரமாகி இருக்கிறது.