முடக்கறுத்தான் பட விமர்சனம்

நாயகன் டாக்டர் வீரபாபு மூலிகை மருத்துவம் செய்கிறார்.. மேலும் சமூக சேவையாக குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களை பராமரித்தும் வருகிறார்.
ஒரு கட்டத்தில் நாயகி மஹானாவுடன் திருமணம் நிச்சயமாகிறது.
திருமணத்திற்கான அனைத்து ஆடைகளையும் குறைந்த விலையில் வாங்க சென்னைக்கு புறப்படுகிறார் நாயகன்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது உறவினரின் குழந்தை காணாமல் போகிறது. குழந்தை கடத்தல் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை இவரது தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்கிறார்.
எனவே களத்தில் குதித்து குழந்தையை மீட்டெடுக்க போராடுகிறார் வீரபாபு. அதன் பிறகு என்ன நடந்தது? கடத்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்றினாரா டாக்டர்? திருமணம் நடைபெற்றதா? அதுதான் ‘முடக்கறுத்தான்’ படத்தின் கதை.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடிக் கொண்டிருந்த வேளையில் சித்த மருத்துவத்திற்கு அழைத்து சிறப்பான மருத்துவ சிகிச்சை செய்தவர் தான் இந்த டாக்டர் வீரபாபு… குறைந்த செலவில் சிகிச்சை அளித்த இவரை மக்கள் ரியல் ஹீரோவாக பார்த்தனர். அந்த ரியல் ஹீரோ தான் தற்போது ரீல் ஹீரோவாக இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
தன்னால் முடிந்தவரை தன்னுடைய கேரக்டருக்கு பலம் சேர்த்துள்ளார். அதை சமயம் ஆக்ஷனில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர் கொஞ்சம் மெனக்கட்டு நடித்திருக்கலாம்.
நாயகி மஹானா கொஞ்ச நேரம் தலைகாட்டி அவருடைய வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
வில்லனாக சூப்பர் சுப்பராயன்.. டூப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் அசத்தி இருப்பது பாராட்டுக்குரியது.. மறைந்த மயில்சாமி வரும் காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. எதிர்பாராத சிறப்பு தோற்றத்தில் சமுத்திரக்கனி படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்..
இவர்களுடன் சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரும்.. சில காட்சிகளில் உண்மையாகவே சிரிக்க வைத்திருக்கின்றனர்.
அருள் செல்வனின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.. சிற்பியின் இசையில் பழநி பாரதியின் வரிகளில் பாடல்கள் சுமார்.. 1990களின் சிற்பியின் இசை பெரும் ஹிட் அடித்தது.. அந்தப் பாடல்களை இப்போது எதிர்பார்த்தால் ஏமாற்றமே..
நாயகனாக நடித்த டாக்டர் கே.வீரபாபு தான் இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி உழைத்திருக்கலாம்.
