தூக்குதுரை திரைப்பட விமர்சனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ், முத்தழகு போன்ற தொடர்களில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இனியா.. இவருக்கும் யோகிபாபுக்கும் காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் எதிர்ப்பை மீறி இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று விடுகின்றனர். 20 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கதை சென்னையில் ஆரம்பமாகிறது..
மகேஷ், பால சரவணன், சென்ராயன் மூவரும் இணைந்து மிகப்பெரிய கிரீடம் ஒன்று மாரிமுத்து வசிக்கும் கிராமத்தில் இருப்பதை அறிந்து கிராமத்திற்கு வருகின்றனர்.
இவர்கள் திட்டத்தை அறிந்த மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணன் இவர்களைக் கட்டி வைத்து மிரட்டுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.?. கிரீடத்தை மூவரும் கொள்ளையடித்தார்களா?ஓடிப்போன யோகி பாபுவுக்கு இந்த கிராமத்திற்கும் பின்னர் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? இனியா என்ன ஆனார்? மாரிமுத்து என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதி கதை.
தூக்குதுரை படம் தொடங்கிய 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் யோகி பாபு. அதன் பின்னர் அவரது கேரக்டர் வேறு விதமாக திருப்புமுனையுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதை சொன்னால் ட்விஸ்ட் அவிழ்ந்து விடும்.. கொஞ்ச நேரமே என்றாலும் கலகலப்பு ஊட்டி செல்கிறார் யோகி பாபு.
இனியாவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கொஞ்ச நேரத்தில் தன் கேரக்டரை இனிமையாக செய்து முடித்திருக்கிறார்.
மாரிமுத்து மற்றும் நமோ நாராயணன் இருவரும் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்து உள்ளனர்.
நாயகன் மகேஷ், பால சரவணன் மற்றும் சென்றாயன் கேரக்டர்கள் சிறப்பு.. கும்கி அஸ்வின் கேரக்டரில் கொஞ்சம் வலு சேர்த்து இருக்கலாம்.
கொள்ளைக் கூட்டத் தலைவனாக மொட்ட ராஜேந்திரன்..
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.
ஓபன் கேட் பிக்சர்ஸ் பேனரில் அரவிந்த் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அன்புரசு கணேசன் ஆகியோர் தூக்குதுரை தயாரித்துள்ளனர்.
ரவிவர்மா கே ஒளிப்பதிவு செய்ய, கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார்.
இயக்குனருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளர் & இசையமைப்பாளரும் தங்கள் பணியை நேர்த்தியாக செய்திருக்கின்றனர். காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. முக்கியமாக பேய் ஓட்டும் கிராபிக்ஸ் காட்சிகளில் படக்குழுவினரின் முயற்சி தெரிகிறது.
பின்னணி இசை மிரட்டல் பாடல்கள் ரசிக்கும் ரகமே… கிராமத்து மனிதர்களுடன் பேய் கதையை கொஞ்சம் கலந்து கமர்சியல் படமாக இந்த தூக்குத் துரையை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
