திரை விமர்சனம்

கனவுலக பேய்.. கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சனம் 3.5/5

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் கதை நாயகனாக நடித்துள்ள படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.

கம்ப்யூட்டர் கேம் டிசைனர் சதீஷ். ஒரு கட்டத்தில் இவரது வீட்டில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஒரு வினோதமான பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளில் இருந்த இறகை இவர் பறிக்கவே அடிக்கடி கன உலகிற்கு செல்கிறார்.

அங்கு இவரை பேய் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் இவரைப் போலவே டாக்டர் ரெட்டின் கிங்சிலி.. பஞ்சாயத்து ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் அந்த இறகை பறிக்கவே அவர்களும் கனவுலகில் உள்ளே செல்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் பேய்களால் துரத்தப்படுகிறார்கள்.. அந்த கன உலகில் இருந்து இவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர் சதீஷ்.. இவர் காமெடியில் இருந்து ஹீரோவாக உயர நினைக்கவில்லை போல. ஆனால் கதையின் நாயகனாக பல பரிணாமங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பதட்டம் கலக்கம் குழப்பமான மனநிலை என வெரைட்டியாக தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்து செல்கிறார் நாயகி ரெஜினா. இவர் இல்லை என்றாலும் படத்தில் எந்தவிதமான குழப்பம் இருக்காது பாதிப்பும் இருக்காது.

தமிழ் சினிமா இயக்குனர்களின் அம்மா சாய்ஸ் சரண்யா பொன்வண்ணன். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக யூடியூபராக வந்து சில நேரம் ஓகே ரகம் என்றாலும் சில நேரம் எரிச்சல் ரகமே.

இவர்களுடன் ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் என ஒரு பட்டாளமே உள்ளனர்.

இதில் ஆனந்தராஜ் வழக்கமான தனது தனித்துவத்தை காட்டி மற்றவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஏழுமலையாக பேய் ஓட்டும் நிபுணராக நாசர்.

பின்னணி இசையில் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா. அதிலும் இது பேய் படம் என்பதால் அதற்கு ஏற்ப இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.

கனவு உலகம் நிஜ உலகம் என இரண்டையும் குழப்பமின்றி தன் ஒளிப்பதிவில் மெருகேற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. அவருக்கு ஏற்ப குழப்பம் இன்றி தெளிவான நீர் ஓடையைப் போல படத்தொகுப்பை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.

பேய் படங்கள் என்றாலே கலை இயக்குனருக்கு பேய் வேலை இருக்கும். அந்த பொறுப்பை உணர்ந்து கலை இயக்குனர் மோகன மகேந்திரன் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்.

உறங்கினால் தானே கனவு வரும் உறங்காமல் இருந்தால் கனவு வராது என்ற கண்ணோட்டத்தில் திரைக்கதையை அமைத்து கொஞ்சம் கலகலப்பை கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்.

யார் உடம்பில் ராபர்ட் ஆவி இருக்கிறது? என்பதை அறிய ஒவ்வொருவரும் படும் ஆட்ட அவஸ்தைகளை சிறப்பாகவே சொல்லி இருக்கிறார் டைரக்டர்.