திரை விமர்சனம்

பொக்கிஷ காதல்.. – கட்டில் விமர்சனம் 3.75/5

பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் & மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ‘கட்டில்’ படத்தை தயாரித்துள்ளது.

நடிகர்கள்: ஈவி கணேஷ் பாபு, சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம்..

ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் தனது அம்மா கீதா கைலாசம், மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 6 வயது மகன் ஆகியோருடன் வாழ்கிறார். மனைவி நிறை மாத கர்ப்பிணி. இவர்களின் வீடு அரண்மனை போன்றதாகும்.

நாயகனின் உடன் பிறந்தவர்கள் ஓர் கட்டத்தில் வேறு வேறு இடங்களில் செட்டிலாகி விடவே வீட்டை விற்க சொல்கின்றனர். அதற்கு மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார்.

ஆனாலும் அவருக்கு தனது தலைமுறை தழைத்தோங்க பொக்கிஷமாக விளங்கிய கட்டிலை விற்க மனம் வரவில்லை. அதே சமயம் அந்த பெரிய கட்டிலை சிறிய வீட்டிலும் வைக்கவும் இடமில்லை.

அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தாத்தா, தந்தை, மகன் என 3 தலைமுறையிலும் நடித்து இருக்கிறார் கணேஷ்பாபு. கேரக்டருக்கு ஏற்றார் போல் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்து நம்மையும் சில நேரம் வலியால் துடிக்க விடுகிறார்.

தாயாக கீதா கைலாசம். சினிமாத்தனம் இல்லாத யதார்த்த நடிப்பு.

சிறிது நேரம் வந்தாலும் விதார்த் கேரக்டர் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.

ஒளிப்பதிவு: ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரன்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம் : ஈவி கணேஷ் பாபு

படத்தில் இயக்குனரே நாயகனாக நடித்துள்ளதால் தனது கேரக்டரை உணர்ந்து அதற்கு ஏற்ப பல்வேறு வேடமேற்று உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கட்டில் படத்தை தாலாட்ட படத்திற்கு பெரிய பலமாக ஶ்ரீகாந்த் தேவாவின் இசை அமைந்துள்ளது. பாடல்களும் மனதிற்கு இதமளிக்கிறது. ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. தலைமுறை தலைமுறையாக காட்டப்படும் ஒரு குடும்பத்தில் காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக செய்திருக்கிறார். பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது.

ஒரு கட்டில் என்பது தாம்பத்தியத்திற்கு மட்டுமல்ல தலைமுறை தழைத்தோங்க ஒரு பொக்கிஷம். அதை இன்றைய நவீன யுகத்தில் போற்றி பாதுகாப்பது அரிதான ஒன்று. அதை நகைச்சுவையும் உணர்வும் கலந்து கட்டிலை கொடுத்திருக்கிறார் கணேஷ் பாபு.