சினிமா செய்திகள்திரை விமர்சனம்

எல்.ஜி.எம். பட விமர்சனம்

ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலாகிறார்கள். ஆனால் இரண்டு வருடம் பழகிப் பார்த்த பின் பிடித்தால் மட்டுமே திருமணம். இல்லையெல் நண்பர்கள் மட்டுமே என்கிறார், இவானா. இரண்டு வருடம் முடிந்த நிலையில் இவானா வீட்டிலும் முறைப்படி பெண் பார்க்கும் படலம். இங்கே ஒரு திருப்பம். காதலனின் அம்மாவுடனும் பழகிப் பார்த்த பிறகே திருமணம் என்று அதிர் வெடியை வீசுகிறார், இவானா. இதனால் திருமணப் பேச்சு நின்று போகிறது. காதலர்களின் பேச்சும் தான்.

ஒரே அலுவலகம். அருகருகே இருக்கை. பேசாமல் இருக்க முடியுமா? காதலி இவானாவே மௌனத்துக்கு விடை கொடுத்து ஒரு ஐடியா சொல்கிறார். அதாவது இரண்டு குடும்பங்களும் டூர் போவோம். அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப் பார்த்து ஒகே ஆனால், திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான் ஐடியா.
அதன்படி, இரு குடும்பத்தாரும் டூர் போக, இவானா மீதான கோபத்தில் பட்டும் படாமல் நடந்து கொள்கிறார், நதியா.அடுத்தடுத்த சம்பவங்களில் வருங்கால மாமியார்-மருமகள் நட்பு பலமானதா, பலவீனமானதா என்பதை புதிய கோணத்தில் சொல்லி ரசிக்க வைக்கிறார்கள்.
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகிய மூன்று பேரை சுற்றித்தான் கதையே.
படத்தில் ஹரிஷ் கல்யாண் – இவானா கெமிஸ்ட்ரியை விட நதியா – இவானா கெமிஸ்ட்ரி தான் அதிகம். இருவரும் நட்பாகும் இடங்களில் யோகிபாபுவும் இணைந்து கொள்ள…கலகலப்பும் சரவெடியுமாய் காட்சிகள் ஜோர் கட்டுகின்றன. ‘பப்’பில் தான் நாங்கள் நண்பர்களானோம் என்று இவானா சொல்ல, மகனை மனதுக்குள் திட்டும் இடத்தில் நதியா நடிப்பு ‘வேற லெவல்யா.’
டூர் வேன் டிரைவராக வந்து கதைக்கு கலகலப்பு முகம் கொடுக்கிறார், யோகிபாபு. இவர் வேன் பயணத்தில் காத்தாடி ராமமூர்த்்தியை கலாய்க்கும் இடங்களில் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. ஹரீஷின் நண்பர்களில் கூடவே வந்து லந்து பண்ணும் வி.ஜே. விஜய் தனித்து தெரிகிறார்.
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்தின் கேமராவில் கூர்க் உள்ளிட்ட பயண காட்சிகள் அத்தனை அழகு.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசை அருமை.
வருங்கால கணவர் பற்றி தெரிந்து கொள்வதை விட வருங்கால மாமியார் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் இளம் பெண்களின் கோணத்தில் கதை சொன்ன இயக்குனர், பிற்பகுதி கதையை காடுமேடு சுற்ற விட்டிருக்க வேண்டாம். காட்டுக்குள் சாமியார், அவருக்கு ஆசிரமம் நிறைய பக்தர்கள் என்று பிற்பகுதி கதை திசை திரும்பி விடுமோ என்று எண்ணிய நேரத்தில் லகான் போட்டு கதைக் கப்பலை சாமர்த்தியமாக திருப்பி விடுகிறார், இயக்குனர்.
வருங்கால கணவரை புரிந்து கொள்ளும் அளவுக்கு வருங்கால மாமியாரையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை கதைக்களமாக எடுத்துக் கொண்ட ரமேஷ் தமிழ்மணி, கொஞ்சம் மூச்சு வாங்கினாலும் அதில் வெற்றிக் கோட்டை தொட்டு விடுகிறார்.