லவ் பட விமர்சனம்

நடிகர் பரத்தின் 50-வது படம். மலையாளத்தில் காலித் ரஹ்மான் இயக்கி, 2020 இல் வெளிவந்த ‘லவ்’ படம் தான் தற்போது தமிழிலும் அதேபெயரில் ரீமேக் ஆகி வெளிவந்திருக்கிறது.
காதலில் தொடங்குகிறது, கதை. காபி ஷாப்பில் வாணி போஜனை சந்திக்கும் பரத்துக்கு முதல் சந்திப்பிலேயே காதல். எதிர்தரப்பிலும் காதல் பற்றிக் கொள்ள, அடுத்தது திருமணம் தானே. ஆனால், பரத்தோ பிஸினஸில் தொடர் சறுக்கல் இருப்பதால் அதில் வெற்றி பெற்றதும் திருமணம் என்கிறார். வாணி போஜனோ பரத் மீதான நம்பிக்கையில் ‘திருமணம் நடக்கட்டும். நிச்சயம் தொழிலில் உச்சம் தொடுவீர்கள்’ என நம்பிக்கை அளிக்க, நடக்கிறது திருமணம். வாணிபோஜனின் தந்தை வழங்கிய பிளாட்டில் தம்பதிகள் குடியேறுகிறார்கள். பிஸினஸில் செட்டில் ஆகும் வரை குழந்தை வேண்டாம் என்ற பரத்தின் முடிவுக்கு வாணி போஜன் சரி சொல்ல…
இப்போது ‘ஒரு வருடத்துக்குப் பிறகு’ என்று டைட்டில் போடுகிறார்கள். வாணி தாய்மையடைந்த நிலையிலும் பரத் போதையின் உச்சத்திலும் இருப்பதாக காட்சிகள் போகிறது. இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபத்தில் பரத் வாணி போஜனை தள்ளி விட, விழுந்து அடிபட்ட வாணி இறந்து விட… பிணத்தை மறைத்து வைத்த நிலையில், தன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக குழப்பத்தில் இருக்கும் நண்பர் விவேக் பிரசன்னா அங்கே வருகிறார். அடுத்த கொஞ்ச நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் பிக்பாஸ் டேனியும் அங்கே வருகிறார். நடுவே வாணி போஜனின் அப்பா ராதாரவியும் வந்து செல்கிறார்.
ஒரு கட்டத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வர, உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசிக்கிறார்கள். அப்போது மீண்டும் காலிங் பெல் ஒசை. திறந்தால் அங்கு வாணி போஜன் நிற்கிறார். அதேசமயம் அதிர்ச்சியிலும் அதிரச்சியாக விவேக் பிரசன்னா, டேனி இருவரும் காணாமல் போகிறார்கள்.
அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? நண்பர்கள் இருவரும் காணாமல் போக காரணம் என்ன? என்ன தான் நடந்தது? எதிர்பார்க்கவே முடியாத கிளைமாக்ஸ் புதுசு.
பரத்தும் வாணிபோஜனும் அசல் கணவன் – மனைவி சண்டையை கண் முன் நிறுத்துகிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் பாசமிகு தந்தையாக ராதாரவி சிறப்பு. விவேக் பிரசன்னா, டேனி இருவரும் கொடுத்த கேரக்டருக்கு குறைந்த பட்ச நியாயம் செய்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரிய வரும்போது நமக்கு கழுத்து வரை வியர்க்கிறது.
வாணி போஜன் மீண்டும் வரும்போது கதை சூடு பிடிக்கும் என எதிர்பார்த்தால் அவரது அடுத்த நடவடிக்கையை முடித்து வைத்து விடுகிறது. இந்த எதிர்பாராத கிளைமாக்சில் மட்டும் இயக்குனர் பாலா நிற்கிறார்.
பி.ஜி.முத்தையாவின் சிறப்பான ஒளிப்பதிவு நம்மை கதைக்குள் கொண்டுபோகும் மாயம் செய்து விடுகிறது.
50-வது படத்தை தொட்டிருக்கும் பரத், இனியாவது தனக்கான கதைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கடைசி எச்சரிக்கை இந்த ‘லவ்.’
