டைனோசரஸ் பட விமர்சனம்

தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டைனோசர் படமோ என யோசிக்க வேண்டாம். ஊரையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கிற தாதாவானாலும் அவருக்குத் தலை வணங்காத ஒரு சில் வண்டு அவன் கண்களுக்கு டைனோசராக தெரிந்து பயமுறுத்தக்கூடும் என்பது படத்தின் கதைக்களம்.
வடசென்னையில் மானெக்ஷா, கவின் ஜெய்பாபு என இரண்டு தாதாக்கள் சென்னையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்க, அதில் கவினின் மருமகனை மானெக்ஷாவின் அல்லக்கைகள் போட்டுத் தள்ளி விட… அவர்கள் உயிருக்கு தாதா கவினால் ஆபத்து வரக்கூடும் என்பதால், அவர்கள் அத்தனை பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார் இந்த தாதா மானக்ஷா.
அந்த கொலையாளிகளுள் ஒருவனான மாறா, தன்னுடைய உயிர் நண்பன். சமீபத்தில் தான் திருமணம் ஆனவன் என்பதால் அவனுக்கு பதிலாக சிறைக்குப் போகிறான் ரிஷி. இந்நிலையில் மருமகனை கொலை செய்தவன் சக தாதாவின் அசைன்மென்ட்டுக்காக தன் வீட்டுக்கே வந்திருக்கிறான் என்பது தெரிய வர, மாறாவை தனது அடியாட்கள் மூலம் காலி பண்ணி விடுகிறார், தாதா கவின்.
இந்த கொலைக்கு ஒருவிதத்தில் உதய் கார்த்திக் காரணமாகி விடுகிறார். அந்த குற்ற உணர்வுடன் கூடியஅடுத்்த அவரது அடுத்தடுத்த அதிரடியே கிளைமாக்ஸ்.
வடசென்னை என்றாலே ரத்தமும் ரவுடியிசமும் தான் என்று இதுவரை வந்த படங்கள் இருக்க, இருக்க, இதில் சற்று வித்தியாசம் காட்ட எண்ணி படம் முழுவதையும் கலகல பின்னணியில் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன்.
நாயகன் உதய் கார்த்திக் நடிப்பில் கவர்கிறார். தலைக்கு கத்தியே வந்தாலும் வன்முறை பக்கம் போக மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கும் அவர் வருகிற காட்சி எல்லாமே ரசனைக் களஞ்சியம். கிழவிகளிடம் அவர் செய்யும் அலப்பறையும் அவரிடம் தப்பி வந்த கிழவி இன்னொரு கிழவியிடம் “அந்த பக்கம் போகாதே… ஒருத்தன் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கிறான்…” என்று சொல்வதும், பதிலுக்கு அந்த கிழவி “யார் நம்ம விஜய் சேதுபதிதானே..?” என்று வெட்கப்பட்டு பதில் சொல்வதும், “அவர் ஆம்பளைகளுக்குதான் முத்தம் கொடுப்பார். இவன் எல்லாருக்கும் கொடுக்குறான்…” என்று இந்தக் கிழவி பதில் சொல்வதும் திரையரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கிறது. விடுகிறது.
உதய்யின் காதலியாக வரும் சாய் பிரியா தேவா காதல் காட்சிகளில் தேறியிருக்கிறார். இவரது உதட்டு முத்தம் நிஜமாகவே ஸ்பெஷல்.
நட்பிலும், தியாகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் ரிஷியின் பாத்திரம் கவர்கிறது. மாறாவின் மரணம் நிச்சயிக்கப்படும் இடமும் அதற்கான கவுண்ட் டவுனும் திக் திக் திகில் நிமிடங்கள். இந்த இடத்தில் தாதா கவின் போடும் ஸ்கெட்ச், உச்சக் கட்ட பதட்டம் ஏற்படுத்தி விடுகிறது.
உதய்யின் அம்மாவாக வரும் ஜானகி கிடைத்்த கொஞ்ச இடத்திலும் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார்.
ஜோன்ஸ் வி.ஆனந்தின் ஒளிப்பதிவும் போபோ சசியின் இசையும் தாதா கதைக்குள் அதிரடி காட்டுகிறது. வெளியே தெரியாத வன்முறை மூலம் தாதாயிசத்தை உதய் முடிவுக்குக் கொண்டு வரும் அந்த கிளைமாக்ஸ் அட்டகாசம். புதியவர்கள் அதிகம் என்றாலும் கதைக்கு அதுவே பலமும் ஆகி விடுகிறது. இந்த டைனோசர் வேகத்தில் ‘ஜெட்…’
