திரை விமர்சனம்

போர்த் தொழில் பட விமர்சனம்

மர்மக் கொலைகளை விசாரிக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகள்-சைக்கோ கொலையாளிக்கு இடையிலான திரில்லர் பயணமே கதைக்களம். அதை விறுவிறு நடையில் இறுதி வரை சஸ்பென்சாக சொன்ன விதத்தில் தனி கவனம் பெறுகிறார், இயக்கிய விக்னேஷ்ராஜா.

புதிதாக போலீஸ் பணியில் சேர்கிறார், பிரகாஷ். திறமையும் கண்டிப்பும் மிகுந்த க்ரைம் பிராஞ்ச் மேலதிகாரியான லோகநாதனிடம் பயிற்சிக்காக அனுப்புகிறார்கள். அவரை வேண்டா வெறுப்பாக நடத்தும் லோகநாதன், திருச்சியில் நடக்கும் தொடர் கொலைகள் தொடர்பான வழக்கை விசாரிக்க தன்னுடன் அழைத்துச் செல்கிறார், லோகநாதன். பிரகாஷ் தனது புத்தக அறிவை வைத்து லோகநாதனிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்க, அவரைத் தொல்லையாகவே பார்க்கிறார் லோகநாதன்.
இதற்கிடையே எவ்வித தடயமும் இல்லாமல் தொடர்ச்சியாக கொலைகளை சைக்கோ கொலைகாரன் செய்து வர, டிபார்ட்மென்ட்டுக்குள் மேலதிகாரிகளின் நெருக்கடிகளை லோகநாதன் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. இந்நிலையில், பிரகாஷின் தொழில் ஆர்வம் தெரிய வர, அவருக்கு களப் பயிற்சியை தருகிறார் லோகநாதன்.
பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்யும் அந்த சீரியல் கில்லர் யார்? அவனின் நோக்கம் என்ன? இந்த வழக்கை லோகநாதன்- பிரகாஷ் கூட்டணி கண்டு பிடித்ததா? என்பது திகுதிகு திரைக்களம்.
பிரகாஷாக அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படி மேலேறியிருக்கிறார்.களப்பணிக்கு உள்ளூர பயந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போலீஸ் கெத்துடன் வேலைக்கு வருவது, ஒரு கட்டத்தில் இந்த கொலை வழக்கில் ஈடுபாடு காட்டி தன் சீனியரை இம்ப்ரஸ் செய்வது என சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். புதிதாக பணியில் சேரும் காவலருக்கே உரிய துடுக்குத் தனம் ஆரம்ப கட்டத்தில் வெளிப்படுவது சிறப்பு.

லோகநாதனாக சரத்குமார், தனதுஅனுபவ நடிப்பின் மூலம் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். எல்லோரிடமும் கடுகடு முகம் காட்டுவது, தனது அனுபவ அறிவு மூலம் கொலையாளியை நெருங்குவது, அசோக்செல்வனின் ஆர்வத்தை ரசிப்பது என நடிப்பில் லோகநாதனாகவே மாறி அட்டகாசம் செய்திருக்கிறார்.

வழக்கமான டூயட் பாட்டுக்கு ஆடிப்போகும் நாயகியாக அல்லாமல் நிகிலா விமல் தனது கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

த்ரில்லர் கதைகளுக்கு ஏற்ற பரபர இசையை கொடுத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். கூடவே கலைச்செல்வன் சிவாஜியின் கேமராவும் திரில் ஊட்டுகிறது.
பெண்களை மட்டுமே குறி வைத்து கருணையில்லாமல் நடக்கும் தொடர் கொலைகள், கொலையாளியை சந்தேகித்து நெருங்குவது என முதல் பாதி பரபரப்பு. கொலையாளியை காவல்துறை நெருங்கி விட்டபிறகும், முடிவு வரை அதே விறுவிறுப்பு. சீரியல் கில்லர்களுக்கான கொலைப் பின்னணியை நியாயப்படுத்தாத இடத்திலும் டைரக்டர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் போட்டிருப்பது புதிய பாதை.

குழந்தை வளர்ப்பை சரியாக கையாளாத பெற்றோரும், குற்றவாளிகள் உருவாக ஒரு காரணம் என்பதை மனதில் பாரம் ஏற்றும் விதத்தில் காட்சிப்படுத்தியதிலும் தெவிட்டாத விருந்தாகி விடுகிறது, இந்த திரில்லர் கதை.