விமானம் படவிமர்சனம்

வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். அந்த ஆசையை நிறைவேற்ற ஒரு பாமரத்தந்தையாக போராடுகிறார் சமுத்திரக்கனி. இதற்கிடையே திடீர் அதிர்ச்சியாக மகனுக்கு ரத்தப்புற்று நோய் வந்து அதிக பட்சம் இன்னும் சில நாட்கள் தான் அவன் உயிரோடு இருப்பான் என்று மருத்துவ பரிசோதனை சொல்ல…
இப்போது அவன் வாழும் அந்த கொஞ்ச நாட்களுக்குள் அவனை விமானத்தில் ஏற்றிப்பார்க்க ஆசைப்படுகிறார், அந்த ஏழைத்தந்தை. அது நிறைவேறியதா? இல்லையா? என்பது நெகிழ்ச்சி கிளைமாக்ஸ்.
மகன் மீதான பாசத்தில் உருகி, நம்மை உருக வைக்கிறார், சமுத்திரக்கனி. மகன் விமான நிலையம் அருகே மயங்கி கிடப்பதை பார்த்த நொடியில், தனது மூன்று சக்கர வண்டியில் இருந்து கீழே விழுந்து செல்லும் காட்சியில் கலங்க வைக்கிறார். மகன் தன்னை விட்டு நிரந்தரமாக பிரியப் போகிறான் என எண்ணி தனக்குள் அழும் காட்சியிலும், தனது நண்பர்களிடம் மகன் இறக்கப்போகிறான் என்று சொல்லும் காட்சியிலும் அந்த இயலாமை பாச அப்பா மனதை விட்டு அகல மறுக்கிறார்.
மகனாக துருவன் பொருத்தமான தேர்வு. நடிப்பில் பல இடங்களில் ஆச்சரியம் தருகிறான். தனது நோய் முற்றி வரும் நிலையில் அதன் விபரீதம் உணராமல், ‘இனி நானே படித்து வேலைக்குப் போய் சம்பாதித்து உங்களை விமானத்தில் அழைத்துப் போகிறேன் அப்பா’ என்று சொல்லும் இடத்தில் கண்ணோரம் ஈரம்.
கிளைமாக்சில் கொஞ்ச நேரமே வந்தாலும் தன் இருப்பை நிரூபித்து விடுகிறார், மீரா ஜாஸ்மின். சமுத்திரக்கனியின் நண்பர்களாக வரும் ஆட்டோ டிரைவர் தன்ராஜூம் அவர் மனைவியாக வருபவரும் குப்பத்து மாந்தர்களாக அத்தனை இயல்பு. அழகியை அடைய ஆயிரம் ரூபாய் சேர்க்க பிரயத்தனப்படும் ராகுல் ராமகிருஷ்ணா கலகலப்புக்கு உத்தரவாதம்.
பாலியல் தொழிலாளிஅனுசுயா பரத்வாஜ், மொட்டை ராஜேந்திரன் குறைவற்ற நடிப்பில் கவர்கிறார்கள்.
சரண் அர்ஜுனின் இசையும், விவேக் கலேபுவின் ஒளிப்பதிவும் இயக்கிய சிவபிரசாத்துக்கு பக்க பலம். கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது என்றாலும் காட்சியாக வரும்போது கனமாகி விடுகிறது, இதயம். இந்த அப்பா-மகன் பாசக்கதையில் சொப்பனசுந்தரி சம்பந்தப்பட்ட காட்சிகள் என்னத்துக்கு?
விமானம் -பிழியப் பிழிய பாசம்.
