நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற ‘எண்டே நாராயணனுக்கு’ எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார்.
மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பார் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் எழுதியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இதய பூர்வமான இசையமைப்பின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டார். வாரணாசியில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம்- 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும்.

