பெல் பட விமர்சனம்

சித்தர்களின் வம்சாவழியை சேர்ந்த ஸ்ரீதர், பல தலைமுறையாக தனது குடும்பத்தினர் பாதுகாத்து வந்த, மனிதர்களுக்கு மரணமே ஏற்படுத்தாத அபூர்வ மூலிகையை பாதுகாத்து வருகிறார். அதே சித்தர்களின் வம்சத்தை சேர்ந்த குரு சோமசுந்தரம், அந்த மூலிகையை வெளிநாட்டுக்கு கோடிகளில் விற்க முயற்சிக்கிறார். அந்த மூலிகை பாதுகாக்கப்பட்டதா? அல்லது எதிரி கைக்கு வந்ததா? என்பது கதை.
பெல் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் ஸ்ரீதரும், மறைந்த நடிகர் நிதிஷ் வீராவும் நடித்திருக்கிறார்கள். நிதிஷ் வீரா காலமானதால், ஸ்ரீதரை வைத்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். ஆனால், அதையே வித்தியாசமான முறையில் சொல்லி படத்திற்கு புது பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் வரும் மறைந்த நடிகர் நித்திஷ் வீரா சிறப்பு பார்வை திறனுடன் இதில் பெல்லாக நடித்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு மெச்சும்படி இருக்கிறது. அதிலும் அபூர்வ மூலிகை பற்றிய விளக்கத்தை அவர் விளக்கும் அந்த நீண்ட நெடும் காட்சியில் அவர் நடிப்பு, இப்படியொரு கலைஞனையா இழந்தோம் என்று மனதை கலங்கடித்து விடுகிறது.
நாயகியாக வரும் துர்கா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
அபூர்வ மூலிகையை கைப்பற்ற போராடும் கேரக்டரில் குரு சோமசுந்தரம் நடிப்பு அத்தனை இயல்பு.
இந்தப் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். முதல் படம் என்றாலும் தவிப்பும் துடிப்புமான தன்னுடைய வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர்.
மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலே கதைக்களம் என்பதால் ஒளிப்பதிவாளர் பரணி கண்ணன் கேமரா உபயத்தில் காட்சிகளில் பசுமை கொஞ்சுகிறது. ராபர்ட் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசையில் கதையின் கனத்தை கூட்டியிருக்கிறரார்.
பழங்கால மருத்துவத்தின் அவசியத்தையும், பெருமையையும் பாடமாக அன்றி படமாக, அதுவும் எதிர்பார்ப்புக் களத்தில் தந்து இயற்கை காவலனாகி இருக்கிறார், இயக்குனர் வெங்கட்புவன்
