சினிமா செய்திகள்திரை விமர்சனம்

குட்நைட் திரை விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை என்பது பிரச்சினை. அதனால் ஆபீஸ் தொடங்கி அக்கம்பக்கம் வரை கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். மலர இருந்த அவர் காதலும் இந்த குறட்டை பிரச்சினையால் வாடிப்போகிறது.

இந்த நேரத்தில்தான் அவர் வாழ்வில் மீதா ரகுநாத் வருகிறார். இருவரும் காதலாகிறார்கள். மணிகண்டன் தனது குறட்டை பிரச்சினையை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறார்.
திருமண வாழ்க்கையிலும் குறட்டை ஒரு பிரச்சினையாகி இல்வாழ்க்கைக்கே முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. அவர்களது இல்லற வாழ்க்கை தொடர்ந்ததா? அல்லது முறிந்ததா? என்பது கலகல பிளஸ் விறுவிறு திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் இயல்பான நடிப்பில் வசீகரிக்கிறார். பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைப்பவர், அலுவலகம் மற்றும் குடும்ப நபர்களிடம் குறட்டையால் அவமானப்படும் காட்சிகளில் மனசை கலங்கடிக்கவும் செய்கிறார்.
நாயகியாக வரும் மீதா ரகுநாத், தனது வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கண்களாலேயே பல காட்சிகளில் பேசி விடுகிறார். கணவரின் குறட்டை விஷயம் தெரிந்து அனலாகும் இடத்தில் தீப்பொறி நடிப்பு.
மணிகண்டனின் அக்காவாக வரும் ரேச்சல் குழந்தை இல்லாததற்காக சுற்றத்தாரின் ஏச்சு பேச்சுக்களை எதிர்கொள்ளும் இடத்தில் அவர் நடிப்பும் உடல் மொழியும் அற்புதம்.

வீட்டோடு மாப்பிள்ளையாக வரும் ரமேஷ் திலக், நாயகியின் பின்னணி அறிந்து அவரை மகளாக பாவிக்கும் ஹவுஸ் ஓனர் பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவியாக நடித்திருப்பவர், எந்நேரமும் மணிகண்டனுக்கு குடைச்சல் கொடுக்கும் மேலதிகாரி பக்ஸ் பொருத்தமான பாத்திரத் தேர்வு.

சென்னையின் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை வெகு இயல்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் வினாயக் சந்திரசேகரன்.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் கதையை அதன் ஜீவன் மாறாமல் பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகின்றன.
முதல் பாதி திரைக்கதையில் இருந்த நேர்த்தியை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இந்த குட் நைட்டின் லெவலே வேறு.