திரை விமர்சனம்

சிறுவன் சாமுவேல் திரை விமர்சனம்

சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நண்பர்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, பேட் வாங்க வசதியில்லாததால் தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகிறார்கள். ஆனால், சிறுவன் சாமுவேலுக்கு எப்படியாவது நல்ல பேட் வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், குடும்ப சூழலால் அவனது பெற்றோரால் அவனுக்கு பேட் வாங்கி கொடுக்க முடியாமல் போக, கிரிக்கெட் பேட்டை வாங்கியே ஆக வேண்டும் என்பதற்காக அவன் மேற்கொண்ட முயற்சி அவனது நெருங்கிய நண்பன் ராஜேஷ் மீது திருட்டு பழியாக வந்து விழுகிறது.

தவறு செய்யாத ராஜேஷ் மீது விழுந்த திருட்டு பழிக்கு, தான் காரணமாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட் பேட் வாங்கும் தனது ஆசைக்காக திசை மாறும் சிறுவன் சாமுவேல், கிரிக்கெட் பேட் வாங்கினானா? தனது தவறை உணர்ந்தானா? என்பது நெஞ்சுக்கு நெருக்கமான திரைக்கதை
சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஜிதன் தவசிமுத்து, சாமுவேலின் நண்பன் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு இருவரும் படத்தில் நடித்தது போலவே தெரியவில்லை. அந்த அளவுக்கு இயல்பாக கேரக்டர்களில் உலா வருகிறார்கள். அதிலும் கே.ஜி.விஷ்ணு அந்த கேரக்டரில் அப்படியொரு அன்யோன்யம்.

மற்ற வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள், பெற்றோர்கள் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் எல்லார் நடிப்பிலும் கன்னியாகுமரி மண்ணின் மணம் கமழ்கிறது. டியூசன் டீச்சராக நடித்திருக்கும் பெண்மணி நடிப்பில் தனித்து தெரிகிறார்.

ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த்தின் கேமரா, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிமையான கிராமத்தை அதன் எளிமையையும், அசல் தன்மையையும் அப்படியே காட்சிப்படுத்தி கதையோடு இன்னும் நம்மை நெருக்கமாக்குகிறது.
எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே..ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரது இசை, காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை நம்முள் சுலபத்தில் கடத்தி விடுகிறது.
குழந்தைகளுக்கான படம் என்ற பெயரில் அவர்களை பெரிய மனிதர்களாக காட்டி கடுப்பேற்றும் படங்களுக்கு மத்தியில், முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படம் தந்து நம் மனதில் மேடை போட்டு அமர்ந்து விடுகிறார், இயக்கிய சாது ஃபெர்லிங்க்.
ஏற்கனவே பல விருதுகளை வென்றாலும், இன்னும் பல விருதுகளை சிக்சராக குவிப்பான் இந்த சாமுவேல்.