திரை விமர்சனம்

தீர்க்கதரிசி பட விமர்சனம்

அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று காவல் கட்டு்ப்பாட்டு அறைக்கு போன் வர, யாரோ சும்மாவாச்சும் சொல்கிார்கள் என்று அசட்டையாக இருந்து விடுகிறது, காவல் துறை. ஆனால் அந்த குரல் சொன்னபடி ஒரு பெண் கொல்லப்படுகிறார். அதற்குப் பின் தொடரும் அந்த அழைப்பில் பேசும் நபர் விபத்து நடக்கும் என்று சொன்னது போலவே அந்தந்த இடங்களில் விபத்து நடந்து காவல்துறையை கதிகலங்க வைக்கிறது.
அந்த மர்ம மனிதர் போலீசுக்கு சொன்னதோடு நில்லாமல் மீடியாக்களுக்கும் தகவல் கொடுக்கிறார். ஒருகட்டத்தில் இந்த விஷயம் வைரலாகி போலீசுக்கு பெரும் தலைவலியாக அமைகிறது.
இதன்பிறகு காவல்துறையை எச்சரிக்கும் அந்த அனாமதேய குரலுக்கு உரியவர் ஒரு ‘தீர்க்கதரிசி’ என பொதுமக்கள் முகம் தெரியாத அவரை பரபரப்புக்குரிய மனிதராக மாற்றி விட…
அதேசமயம் பல உயிர்கள் பலியாவதும் தொடர…
இது எப்படி? என்ற சஸ்பென்ஸ் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
பி.ஜி.மோகன்- எல்.ஆர்.சுந்தரபாண்டி இரட்டையர்கள் க்ரைம் த்ரில்லர் பாணியில் தீர்க்தரிசியை தந்திருக்கிறார்கள். முழுப் படமும் குற்றமும் விசாரணையுமாகவே போய் சஸ்பென்சை கூட்டுகிறது.
நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் அஜ்மலின் மிரட்டலான பார்வையும், மிடுக்கும் அவரைத் தேர்ந்த நடிகராக காட்டுகிறது.
இறுதிக் காட்சியில் வரும் சத்யராஜ் நக்கலும் பழிவாங்கலும் கலந்த கதாபாத்திரத்தில் வந்து படத்தை முடித்து வைக்கிறார்.
ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் கேரக்டர்களில் பொருந்தி்ப் போகிறார்கள்.
கதையின் பரபரப்பிற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். லட்சுமண குமாரின் பின்னணி இசை கதையை நம்முடன் இணைத்து விடுகிறது..
அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் காவல் துறையை, ஒரு சாதாரண மனிதன் மிரட்ட முடியுமா என்பது மட்டும் மில்லியன் டாலர் கேள்வியாய் நிற்கிறது. மற்றபடி தீர்க்கதரிசி காலத்துக்கேற்ற படைப்பு.