திரை விமர்சனம்

விருபாக்–ஷா பட விமர்சனம்

தன் அம்மாவின் அழைப்பை ஏற்று ருத்ரவனம் என்ற அவர்களின் சொந்த கிராமத்துக்குச் செல்கிறார், நாயகன் சாய் தரம் தேஜ். அந்த கிராமத்தின் அழகும் அங்கு வாழும் மனிதர்களும் அவரைக் கவர, கூடவே அவ்வூர் பெரிய மனிதரின் மகள் சம்யுக்தாவை கண்டதும் காதலிலும விழுகிறார். சம்யுக்தாவுக்குள் காதல் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் ஒளித்து வைக்கிறார்.
இந்நிலையில் கிராமவாசிகளில் சிலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழக்க… அதன் பின்னாலுள்ள மர்மத்தை அவிழ்க்க முயலும் சாய் அதைக் கண்டு பிடித்தாரா? அவர் காதல் என்னவானது என்பது திகிலும் திருப்பமுமான மீதிக் கதை.
தொண்ணூறுகளின் கால கட்டத்தில் ஆந்திர கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. நாயகன் ஊருக்குள் நுழையும்போதே திகில் பின்னணியில் சுவாரஸ்யமாகி விடுகிறது.
‘புஷ்பா’ சுகுமாரின் திரைக்கதை படத்தின் பெரும் பலம். கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை உடைக்காமல் திரைக்கதையை நகர்த்தி சென்றிருப்பது படத்தோடு ரசிகர்களை பிணைத்து விடுகிறது.
நாயகனாக வரும் சாய் தரம்தேஜ், தனது கேரக்டருக்கு அளவாக, அழகாக பொருந்துகிறார். காதல் வயப்படும் காட்சிகளில் அந்த முகபாவனைகள் இன்னும் அழகு.
நாயகனை விட கதையில் அதிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் நாயகி சம்யுக்தா அழகான கிராமத்துப் பெண்ணாக வசீகரிக்கிறார். பிற்பகுதி காட்சிகளில் ‘அவரா இவர்’ என்னும் அளவுக்கு நடிப்பில் மிரட்டி விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் சம்தத் சைனுதீனின் கேமரா திகில் காட்சிகளில் நிஜமாகவே பயமுறுத்தி வைக்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் அந்த ஒரு பாடல் கூட திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
வி.பிரபாகரின் வசனம் தெலுங்கு டப்பிங் படம் பார்ப்பது போல் இல்லாமல் நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் வர்மா டண்டு, எளிமையான கதையாக இருந்தாலும் திகில் காட்சிகள் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதில் வெற்றி பெற்று விடுகிறார்.
திரில்லர் மற்றும் திகில் பட ரசிகர்களுக்கு செம வேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *