திரை விமர்சனம்

குலசாமி பட விமர்சனம்

காதல் கதைகளில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த விமலை, கரடுமுரடான தோற்றத்தில் முழுக்க முழுக்க சண்டை நாயகனாக மாற்றியிருக்கிறார், இந்த குலசாமி. அதிரடியிலும் பிரித்து மேய்ந்திருக்கிறார், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உபயத்தில்.
பிளஸ்-2வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த தனது தங்கையை டாக்டராக காண விரும்புகிறார், ஆட்டோ டிரைவரான அண்ணன் விமல். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் தங்கையை சேர்க்கிறார்.
அங்கேபடிக்க வந்து, கட்டணம் செலுத்த தடுமாறும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டி விட்டு, பின்பு அவர்களை பாலியல் பக்கமாய் நகர்த்தி பணம் குவிக்கிறது, ஒரு கும்பல். அக்கும்பலிடம், பல கல்லூரி மாணவிகள் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வரிசையில் விமலின் தங்கையை சிக்க வைக்க முயன்றதில் அவள் சிக்காமல் போக…, இதனால் வெறி கொண்டஅந்த கூட்டத்தால் விமலின் தங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட…
தங்கைக்கு ஏற்பட்டதை போல, இன்னும் சில கல்லூரி பெண்களுக்கும் இதுவே நிகழ… கயவர்களை கண்டறிந்து விமல் பழி தீர்த்தாரா என்பது விறுவிறு மீதிக் கதை.
முகம் முழுவதும் தாடி மீசை கெட்டப்பில் அதிரடி நாயகன் வேடத்துக்காகத் தன்னை முழுக்க தயார் செய்திருக்கிறார் விமல். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. கனல்கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் அதிரடி தெறிக்கும் விமலை மிரட்சியுடன் ரசிக்கவும் முடிகிறது.
நாயகி தான்யா ஹோப் பயப்படும் இடங்ளில் நடிப்பு நன்றாகவே வருகிறது.
கல்லூரிமாணவிகளை தவறான பாதைக்கு மடைமாற்றம் செய்யும் கேரக்டரில் யார்அது வினோதினியா… சைலண்ட் வில்லியாக வெளுத்து வாங்குகிறார்.
போஸ் வெங்கட், ஜனனி பாலு, முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஜாங்கிட், சூர்யா பொருத்தமான தேர்வு.
வைட்ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பு. பெண்களை போகப் பொருளாக எண்ணும் கயவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மிகக் கொடூரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சமரசமின்றி சொன்ன விதத்தில் இயக்குனர் சரவண சக்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *