திரை விமர்சனம்

‘வதந்தி’ இணையத் தொடர் விமர்சனம்

எஸ்ஜே சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘வதந்தி ‘ இணையத் தொடர் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

 

இயக்குநராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் அசத்தி வருகிற எஸ்.ஜே.சூர்யா மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.
தற்போது ஓடிடியிலும் கால் பதித்திருக்கிறார்.அவரது அடுத்த கட்டப் பாய்ச்சல்தான் இந்தத் தொடர்.
இதை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார்.எட்டு பகுதிகளாக வந்துள்ளது.

கன்னியாகுமரி பகுதியில் கதை நிகழ்கிறது.
கதை ஆரம்பித்ததும் ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது.இறந்த கிடந்த அந்தப் பெண் சடலத்தை வைத்து அது ஒரு குறிப்பிட்ட நடிகை என்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால் அது நடிகை அல்ல .இறந்தது தான் அல்ல என்று அந்த நடிகையே மறுக்கிறார். பின்னே யார்? என்பது புரியாத புதிராக இருக்கிறது. என்ன காரணம் என்று அதுவும் விளங்கவில்லை.பிறகு இறந்தது அந்த உள்ளூர்ப் பகுதியில் உள்ள பெண்தான் என்று தெரியவருகிறது. யார் கொலை செய்தது? என்ன காரணம்?நீதிமன்றமே தலை யிட்டு உத்தரவு போடும் அளவுக்கு நிலைமை செல்கிறது.

விளைவு?விசாரணைக்கான சிறப்பு அதிகாரியாக எஸ் ஜே சூர்யா நியமிக்கப்படுகிறார்.அவர் எப்படித் தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் பரபரப்பான சுவாரஸ்யமான இந்த இணையத் தொடரின் கதை.

எஸ் ஜே சூர்யாவிற்கு மிடுக்கான வேடம் சிறப்பான தோற்றத்தில் வந்து அசத்தலான உடல் மொழியிலும் உள்ளூர் மொழி உச்சரிப்பிலும் கலக்குகிறார்.கொலையைத் துப்பறிகிற காட்சிகள் விறு விறு.

சஞ்சனாவிற்கு இது அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார்.அண்மையில் வந்துள்ள சர்தார் படத்திற்குப் பிறகு லைலாவுக்கு இது ஒரு முக்கியமான படம்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

எழுத்தாளராக வரும் நாசருக்கு அந்தப் பாத்திரம் அசலாகப் பொருந்துகிறது. ஏனென்றால் அவரும் ஓர் எழுத்தாளர் என்பதால் இருக்கக்கூடும்.

இவர்கள் தவிர வதந்தி தொடரில் வரும் பிற பாத்திரங்களும் நினைவில் அழுத்தமாகப் பதிகிறார்கள்.

காவல்துறையின் துப்பறியும் செயல்பாடுகளை நீளமாக விவரமாக ஆழமாகக் காட்டியுள்ளனர். திரைப்படம் என்றால் அந்த அளவிற்கு நேரம் இடம் கொடுக்காது. இணையத் தொடர் அதற்கு இடம் கொடுத்துள்ளது.எனவே இது ஒரு புது அனுபவமாகத் தெரிகிறது.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும்.இதில் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து பயணித்துள்ளன.பலம் சேர்த்துள்ளன.

 

கன்னியாகுமரி பகுதியில் கதை நடப்பதால் அந்த குமரி வட்டாரத்தின் மக்கள் பேசும் மொழி வெகுஜன ரசிகர்களுக்குப் புதிதாக உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் பரபரப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. இறுதி அத்தியாயத்தில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகின்றன.

எட்டு எபிசோடுகளைப் பார்த்த போதும் நேரம் போனது தெரியாத அளவிற்கு விறுவிறுப்பாக உள்ளது. அந்தளவுக்கு நேர்த்தியாக திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்,பின்னணியில் இருந்து பெரும்பலமாக இருந்திருக்கிறார்கள் புஷ்கர்- காயத்ரி இருவரும்.

வதந்தி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும் பிரபலங்களைச் சுற்றி எப்படி வதந்தி பின்னப்படுகிறது என்பதையும் காட்டியுள்ளார்கள்.வதந்தியும் அவதூறுகளும் கேட்பவர்களுக்கு இன்பமாக இருக்கலாம்.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பதையும் அவர்கள் வாழ்க்கையை அது எப்படிப் பாதிக்கும் என்பதையும் யாரும் அறிவதில்லை என்பதைக் கூறி வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று எச்சரிக்கையுடன் கருத்தையும் பதிவு செய்கிறது இந்தத் தொடர்.சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் மிகவும் பிடிக்கும்.