விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ,கருணாஸ், கஜராஜ்,முனீஷ் காந்த்,ஸ்ரீஜா ரவி ,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கி உள்ளார்.விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது.

இது பெண்கள் படித்து முன்னேறி சாதனைகள் படைக்கும் காலம் .ஆனால் தங்களுக்கு மனைவியாக வருபவர்கள் தன்னைவிட படிப்பிலும் பதவியிலும் சம்பாத்தியத்திலும் உயர்ந்து மேலே இருக்கக் கூடாது என்கிற ஆணாதிக்க மனோபாவம் இன்னும் ஆண்களிடம் இருக்கவே செய்கிறது. அப்படி ஆணாதிக்க மனம் கொண்ட ஒரு கணவனுக்கும் அவனைவிட தகுதியில் உயர்ந்த ஒரு மனைவிக்கும் திருமணத்திற்குப் பின் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இப்படத்தின் கதை.தற்காலச் சமுதாய சூழலுக்கேற்ப மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப நகைச்சுவை கலந்து கலகலப்பாக,படத்தை இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு.

பொள்ளாச்சிப் பகுதியில் பொறுப்பில்லாமல் அடிதடி செய்து கொண்டு திரியும் முரட்டு நாயகனாக விஷ்ணு விஷால் வருகிறார் .தன்னை விட அதிகம் படித்த பெண் இருக்கக் கூடாது தனக்கு வருகிற மனைவி ஒரு கூந்தல் அழகியாக இருக்க வேண்டும் என்று அவர் தனது மனைவி பற்றிய கனவில் இருக்கிறார். அவருக்கு அவரது மாமா கருணாஸ் சிரமப்பட்டு ஒரு வழியாக ஒரு பாலக்காட்டு பெண்ணைப் பார்க்கிறார். பிடித்து திருமணம் ஆகிறது ஆனால் மணப்பெண் ஒரு கட்டா குஸ்தி என்கிற குத்துச்சண்டை வீராங்கனை.அந்த வீரக் கலையில் மேலே செல்லும் கனவோடு இருக்கிறார். அவர்களது வீட்டிலும் வற்புறுத்தி இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
அதிகம் படித்ததையும் குத்துச்சண்டை விஷயத்தையும் விஷ்ணு விஷாலிடம் சொல்லாமல் மறைத்து இந்தத் திருமணம் நடக்கிறது. அது மட்டும் அல்ல கூந்தல் அழகியாக,தான் எதிர்பார்த்த மனைவி பாப் கட்டிங் உடன் இருப்பது ஒரு கட்டத்தில் தெரியவே அதிர்ச்சி அடைகிறார் விஷ்ணு விஷால்.

இப்படி தனது கனவுக்கு நேர் மாறாக வந்த மனைவியை எண்ணி வருத்தப்பட்டு மனம் கொதிக்கிறார்.தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்.விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்.
தனது கௌரவத்திற்கு இழுக்கு வந்ததாக எண்ணி ஒரு கட்டத்தில் தானும் குத்துச் சண்டை கற்றுக்கொண்டு மனைவியுடன் மோத முடிவெடுக்கிறார் .முடிவு என்ன என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் ஒரு சராசரி ஆணாதிக்கம் கொண்ட ஒரு கணவனின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்.
தனது ஈகோ சீண்டப்படும் போதெல்லாம் அவர் கொதிப்பதும், தான் ஏமாற்றப்பட்ட மன உணர்வை வெளிப்படுத்துவதும் என அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது.தனக்கென ஒரு புதிய பாதை அமைத்து அதில் தனது நடிப்புப் பாதையை தொடர்கிறார் விஷ்ணு விஷால்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி வீராங்கனையாக வருகிறார். அந்தக் கீர்த்தி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி மிடுக்கும் வீரமும் காட்டி உயிரூட்டி அசத்தியுள்ளார்.கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் பாத்திரங்கள் ஏற்பதற்கு இப்போது பிரபல கதாநாயகிகள் யார் இருக்கிறார்கள் நயன்தாராவுக்கு பிறகு ?அந்த வெற்றிடத்தை ஐஸ்வர்யா லட்சுமி நிரப்பலாம். வாய்ப்பிருக்கிறது.வாழ்த்துக்கள்.

இந்தப் படம் ஒரு ஹீரோயின் மையப் படமாக உருவாகியுள்ளது.

இப்படி,தான் தயாரித்த படத்தில் தன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக வழி விட்டு நின்று ரசிக்க ஒரு மனம் வேண்டும். அந்த பெரிய மனம் விஷ்ணு விஷாலுக்கு வாய்த்திருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டலாம்.

படத்தில் கருணாஸ் விஷ்ணு விஷாலின் மாமாவாக வருகிறார். நல்லதொரு குணச்சித்திர நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
காளி வெங்கட், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி , லிசி ஆண்டனி போன்று நடித்திருக்கும் அனைவரும் மனதில் பதிகிறார்கள்.

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்குப் பெரும் பலமாக கை கொடுத்துள்ளன.

கணவன் மனைவி இருவரும் மற்றவரது திறமையையும் மதிப்பையும் ஏற்று,மதித்து விட்டுக் கொடுத்துச் செல்வது தான் குடும்ப வாழ்க்கை என்பதை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் கூறியிருக்கிறார் இயக்குநர்.

குடும்ப வாழ்க்கையில் ஒரு வரிடம் தோற்பது என்பதுதான் உண்மையான வெற்றி என்பதைப் படத்தில் சொல்லாமல் சொல்லி உள்ளார் இயக்குநர். இந்தக் காலத்துக்கு ஏற்ற கதை. இதைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும் படியாக கலகலப்பான ஒரு திரையரங்க அனுபவம் தரும் படமாக உருவாக்கி இருக்கிற இயக்குநரை நிச்சயம் பாராட்டலாம்.

தயாரித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்பதற்கான அறிகுறிகள் படத்தைப் பார்த்த போதே தென்படுகின்றன.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது படத்தின் மீதான நம்பிக்கையைப் பல மடங்கு கூட்டி படத்தை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் சென்றுள்ளது.