சோழ சாம்ராஜ்யத்தை கவிழ்க்க சதித் திட்டம் நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவனை அங்கு அனுப்பி, அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தையிடமும், சகோதரியிடமும் சொல்லப் பணிக்கிறான். சோழ தேசத்து சதிகாரர்களுக்கு மத்தியில் பயணப்படும் வந்தியத்தேவன். பல தடைகளைக் கடந்து சுந்தர சோழரையும், குந்தவையையும் சந்திக்கிறான். இளைய இளவரசர் பொன்னியின் செல்வன் என்று விளிக்கப்படும் அருண்மொழி வர்மனையும் சந்திக்கும் வாய்ப்பு வந்தியத்தேவனுக்கு வாய்க்கிறது.

இதற்கிடையே பெரிய பழு வேட்டரையர் சிற்றரசர்களோடு சேர்ந்துகொண்டு சுந்தர சோழனின் அண்ணன் மகன் மதுராந்தகனை அரியணையில் அமர்த்த திட்டமிடுகிறார். இதற்கு பெரிய பழுவேட்டரையர் மனைவி நந்தினியும் உடந்தை. இதை தெரிந்து கொள்ளும் வந்தியத்தேவன், இதை ஆதித்த கரிகாலனிடமும் அவன் தங்கை குந்தவையிடமும் தெரிவிக்கிறான். இந்த சோதனை போதாதென்று சோழனிடம் தோல்வியை தழுவிய பாண்டியனின் விசுவாசப் படையும் சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக சதி வலை விரிக்கிறார்கள்.

இக்கட்டான இந்த சூழலில் சோழ சாம்ராஜ்யத்திற்கு இவர்களால் அடுத்தடுத்து என்ன பாதகம் ஏற்படுகிறது? இவர்களின் சூழ்ச்சியில் இருந்து மன்னர் குடும்பம் தப்பித்ததா, இல்லையா? என்பது முதல் பாகம் வரையிலான கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே கேரக்டர்களுக்கு பொருத்தமான கதாப்பாத்திர தேர்வு தான். ஆதித்த கரிகாலனாக விக்ரம் அம்சம் பிளஸ் அட்டகாசம். ஒரே நேரத்தில் கோபம், சோகம், வெறுப்பு என உணர்ச்சி பொங்கும்படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். பாண்டிய மன்னனை வேட்டையாடப் போன இடத்தில் அவனது மனைவியாக தனது காதலி நந்தினியை பார்த்ததும் பொங்கி வருகிற அந்த ஆவேசம் இருக்கிறதே, அது விக்ரம் ஸ்பெஷல். ராஷ்டிர கூடர்களுடனான போரில் எதிரிகளை பந்தாடும் அந்த வாள் வீச்சில் தெறிக்கிறது, ஆக்ரோஷம்.

ஆதித்த கரிகாலனின் நண்பன் வந்தியத்தேவனாக வரும் கார்த்தி படம் முழுக்க கலகலப்பை விதைத்து ரசிகர்களின் சந்தோஷமாகி விடுகிறார். ஆழ்வார்க்கடியார் ஜெயராமுடன் சின்னச்சின்ன விவாதங்களில் சிரிப்பு பொறி பறக்கிறது. நந்தினி ஐஸ்வர்யாராயிடமும், குந்தவை திரிஷாவிடமுமான இவரது அழகு வர்ணணை உரையாடல்கள் அத்தனை அழகு. போர்க்களத்திலும் இவரது வாள் பொறி பறக்கிறது.

இளைய இளவரசர் பொன்னியின் செல்வன் என்ற அடைமொழியுடன் வரும் அருண்மொழி வர்மன் பாத்திரம் ஜெயம் ரவிக்கென்றே உருவாக்கப்பட்டதுபோல் அத்தனை கச்சிதம். அந்த ராஜகம்பீரமும் போரிடும் வேகமும், இலங்கை யின் ராஜ்ய பொறுப்பை ஏற்கத் தயங்கும் இடத்திலும் நடிப்பில் அரச முத்திரை. குரலில் கூட சின்னதாய் மாற்றம் செய்த கொண்டு அந்த கேரக்டரில் அவர் வலம் வருவது கேரக்டருக்கான அக்கறையை பறை சாற்றுகிறது. நடுக்கடலில் நண்பனை காா்ர்த்தியை காப்பாற்ற போராடும் (போரிடும்) காட்சிகளில் அந்த ஆவேசம் இதயம் வரை தெறிக்கிறது.

பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சிறிய பழுவேட்டரையர் பார்த்திபன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் அழகாக ஸ்கோர் செய்து விடுகிறார்கள். குறிப்பாக பெரிய பழுவேட்டையரை பாரத்ததும் நமக்கே ஒரு பயம் தொற்றிக் கொள்ள வைக்கிற அந்த உடல்மொழி ஆசம். பாண்டிய நாட்டு படைத்தலைவனாக வரும் கிஷோர் அண்ட் கோ நீருக்கடியில் வரும்போதே பயமுறுத்தி வைக்கிறார்கள். பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, மதுராந்தகன் ரகுமான், ராஜமாதா ஜெயசித்ரா சரத்திரக் கதையில் நடிப்புச் சரித்திரம் படைக்கிறார்கள்.

பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக ஐஸ்வர்யாராய், ‘உள்ளே குரோதம் வெளியே புன்னகை’ என்ற ‘இரு தாங்கி’ நிலையை அழகாக பிரதிபலிக்கிறார். அந்த ஆபத்தான அழகில் சோழ சாம்ராஜ்யம் என்னாகுமோ என்ற கவலை இரண்டாம்பாகம் வரை காத்திருக்க வைக்கிறது.

இவருக்கு சரியான நிகரான குந்தவை கதாபாத்திரத்தில் வரும் திரிஷா புத்திசாலித்தனமான நடிப்பில் பளிச்சிடுகிறார். ராஜ்யத்துக்கு எதிராக சதி செய்யும பெரிய பழுவேட்டைரையரை அவரது சதியாலோசனை கூடத்திலேயே சந்திக்கிற இடம் நடிப்புக்கு நிறைய வேலை வைக்கிற இடம். அற்புதம் நிகழ்த்துகிறார், திரிஷா. இவருக்கும் கார்த்திக்குமான முதல் சந்திப்பிலும் நிகழ்கிறது மாயாஜாலம்.

படகோட்டிப் பெண் பூங்குழலியாக வந்து இளைய இளவரசர் ஜெயம்ரவியின் மனம் பதிந்த ஐஸ்வர்யா லட்சுமி அழகும் நடிப்பும் கலந்த கலவையில் கவர்கிறார்.

ஒவ்வொரு பிரேமையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி அழகோவியமாக்கி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். ராஜபின்னணி கதைக்கு தன் இசை ராஜ்யத்தில் ரகுமான்.தந்திருப்பது கொண்டாட்ட இசை.

கல்கியின் நாவலை திரைப்படுத்திய விதத்தில் நம் இதயச்சிறைக்குள் வலுவாக அடைபட்டுக் கொள்கிறார், மணிரத்னம்.