ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிமைத்துள்ளார். ஹஸ்வத் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பேசுகையில், “இந்த கதையை கேட்ட உடனே தயாரிக்க பிரபஞ்சன் சார் ஒப்புக் கொண்டார். அதுமட்டும் இன்றி, என்னை சுதந்திரமாக பணியாற்ற வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா சாரை தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது தான் ஆடிசன் வைத்து இசையமைப்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இசையமைப்பாளருக்கு ஆடிசன் வைத்தது நாங்களாக தான் இருப்போம். ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிக சிறப்பாக செய்தார். அவருடைய வேலை எங்களுக்கு பிடித்தது அதனால் அதான் அவரை இசையமைப்பாளராக்கினோம். அவரும் மிக சிறப்பாக பணியாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. இப்போது நீங்க பார்த்ததை விட பல மடங்கு படத்தில் இருக்கும். அதுமட்டும் அல்ல, ஒரு சர்ப்ரைசும் படத்தில் இருக்கிறது. அதாவது சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு பான் இந்தியா படம் தான் ‘ஒன் வே’. சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. அந்த அளவுக்கு படம் இருக்கும். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம், இனி படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் தான் உதவ வேண்டும். படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். நன்றி.” என்றார்.

நடிகை குஷ்பு பேசுகையில், “இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தாலே இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். காரணம், என் அண்ணனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காக தான் நான் இங்கு வந்தேன். ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விஷயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜா சாரின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஆரா, இயக்குநர் சக்திவேல் என அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “நடிகை குஷ்பு என் படங்களில் நடிக்கும் போது தமிழ் சரியாக பேசாமல் தடுமாறினார். ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்து சில நாட்களிலேயே தமிழ் கற்றுக் கொண்டு வசனத்தை பிச்சு உதறினார். இப்போது அவர் பேசும் தமிழால் பல மேடைகள் அதிர்கிறது. அப்போது அவருடைய அண்ணன் அப்துல்லா அவருடன் இருப்பார். அப்போதே அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கும் போல, அதனால் தான் இப்போது அவர் நடிகராக மாறிவிட்டார்.

இந்த படத்தில் பாடல்களும், டிரைலரும் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக பாரதியாரின் பாடலை புதிய வடிவத்தில் கொடுத்தது வரவேற்கும்படி இருப்பதோடு, பாராட்டும்படியும் இருக்கிறது. இசையமைப்பாளர் அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாடல்கள் எழுதியவர்களுக்கும் என் பாராட்டுகள். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் ஏதோ பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது. நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் அகத்தியன் பேசுகையில், “இயக்குநர் சக்திவேலை எனக்கு முன்பாகவே தெரியும். இந்த படத்திற்கு முன்பாக அவர் என்னிடம் ஒரு கதை சொன்னார், அந்த கதையை கேட்ட போது நான் ஆடிப்போய் விட்டேன், அப்படி ஒரு கதையாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ‘மைதானம்’ என்ற படத்தை இயக்கினார். அதில் நான் நடித்தேன், அப்போதே அவரின் திறமை எனக்கு தெரிந்தது. திரைக்கதை அமைப்பதில் சக்திவேல் திறமைசாலி, அதனால் இந்த படம் வெற்றி பெறுவதோடு மட்டும் இன்றி, தமிழ் சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஆணுக்கு பெண் சரி சமம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை வலிமை நிறைந்த பெண்கள் யார் என்றால், அரசியலில் ஈடுபடுபவர்கள் தான். ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்றவர்களை சொல்லலாம். அந்த வரிசையில் நடிகை குஷ்பு அவர்களும் வலிமை மிக்க பெண், அவரை பெண் சிங்கம் என்றும் சொல்லலாம். காரணம், அரசியலில் ஈடுபட்டு பலரை எதிர்கொண்டு வெற்றிகரமான பெண்மணியாக பயணிப்பதோடு, தமிழை சரளமாக பேசுவதும் ஒரு காரணம்.

இன்று தமிழகத்தில் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் பலர் தமிழ் பேசுவதில்லை, தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு தமிழ் தேர்வு பாடமாகத் தான் இருக்கிறது. அதனால், தமிழைத் தான் வீட்டில் பேசுகிறோமே, அதற்கு பதில் இந்தி கற்றுக் கொள்ளலாம் என்று இந்தியை தேர்வு செய்கிறார்கள். ஆக, தமிழை காப்பாற்ற வேண்டும்.

இதுபோன்ற சிறிய படங்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். சின்ன தயாரிப்பாளர்கள் சம்பாதித்தால், அவர்கள் அதை சினிமாவில் தான் முதலீடு செய்வார்கள். எனவே, ‘ஒன் வே’ படத்தின் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை ஆரா பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தின் மூலம் தான் காட்சிகளை எப்படி உள்வாங்கி நடிப்பது என்று கற்றுக் கொண்டேன். இந்த படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்த் பேசுகையில், “வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. அவர்கள் என்னை சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். அதுவே படத்தின் கதை மற்றும் காட்சிகள் தான் பின்னணி இசை நன்றாக வர காரணம். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான பிரபஞ்சன் பேசுகையில், ‘‘இப்போது பல படங்கள் வெளியாகிறது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. நூற்றுக்கு ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. எங்கள் படம் வெற்றி பெறுமோ அல்லது தோல்வி அடையுமோ எங்களுக்கு தெரியாது. ஆனால், ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம். நல்ல படம் என்பதை விட மிக வித்தியாசமன ஒரு படமாகவும், இன்று சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இந்த படம் இருக்கும். உங்களிடம் கொடுத்து விட்டோம், இனி இதை நீங்கள் தான் மக்களிடம் சென்றடைய வைக்க வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “’ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தோம், ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது. பலர் ஆங்கில படங்களை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இயக்குநர் சக்திவேல் தமிழ் படத்தை ஆங்கிலப் படம் போல் எடுத்திருக்கிறார்.

இதுபோன்ற சின்ன படங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும். சின்ன படங்கள் வெற்றி பெற்றால் தான் சினிமா வாழும், சினிமா தொழிலாளர்கள் வாழ்வார்கள். நாங்கள் எத்தனையோ சின்ன படங்களின் விழாவுக்கு செல்கிறோம். ஆனால், இந்த படம் எங்களுக்கு முழு திருப்தியளித்தது. மேடைக்காக இதை நான் சொல்லவில்லை, இந்த படத்தின் காட்சிகள் நிமிர வைக்கிறது. படத்தில் பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது.

இன்று பெரிய ஹீரோக்கள் பலர் ஒரு படத்துக்கு சம்பளமாகவே 70 கோடி வரை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை புதுமுகங்களாக போடலாம் அல்லவா… அதை செய்யாமல் செலவுகளை அதிகமாக்குகிறார்கள். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை. பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் பெரிய இயக்குநர்களல்ல. இதுபோன்ற சின்ன படங்களை எடுத்து வெற்றி பெறுவர்கள் தான் உண்மையான இயக்குநர்கள்.

இயக்குநர் சக்திவேல் இந்த படத்தில் பல விஷயங்களை வைத்திருப்பது தெரிகிறது. சர்வதேச பிரச்சனையை கிராமத்து கதையுடன் மிக நேர்த்தியாக சேர்த்து அவர் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும். இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் விநியோகஸ்தர் மாலிக் திறமையானவர், பல படங்களை வெற்றியடைய செய்திருக்கிறார். எனவே, ஒன் வே படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.