சினிமா செய்திகள்திரை விமர்சனம்

பபூன் பட விமர்சனம்

கூத்துக் கலையில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை கொள்கிறார்கள், வைபவ்வும் அவர் நண்பர் ஆந்தங்குடி இளையராஜாவும். வெளிநாட்டு பயணத்துக்கு பணம் தேவை என்பதால், தற்காலிக லாரி டிரைவராகிறார்கள். அவர்கள் ஏற்றி வந்த உப்பு லாரிக்குள் போதைப் பொருள் இருக்க, போலீஸில் சிக்கி, தப்பிக்கிறார்கள். அவர்கள் போலீஸில் சிக்க காரணமாக இருந்த போதைப் பொருள் கும்பல் எது? போலீஸ் அவர்களை தேடிப்பிடித்ததா? என்பது படம்.
போதைப் பொருள் கடத்தல், அதற்குப் பின்னுள்ள அரசியல் நெட்வொர்க்கை புதிய கோணத்தில் அலசியிருக்கிறார், இயக்குனர். இதில் கடத்தல் வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளின் தவிப்பையும் அவர் காட்சிப்படுத்தியிருப்பது தேவையான ஆணி.
கூத்துக் கலைஞரின் மகனாக வரும் வைபவ் கடத்தில் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட அப்பாவி இளைஞனை அப்படியே நடிப்பில் பிரதிபலிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் வேகம் கூடியிருக்கிறது. அவரும் அவர் நண்பன் ஆந்தங்குடி இளையராஜாவும் பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்கள்.
புலம்பெயர் பெண் அனேகாவுக்குத் தன்னை நேசிக்கும் நாயகனுக்கு உதவும் பாத்திரம். கொடுத்த வேலையை அசால்ட்டாக செய்து பெயர் வாங்கி விடுகிறார்.

இயல்பான போலீஸ் அதிகாரியாக, தமிழரசன் கவனம் ஈர்க்க, வரும் கொஞ்ச நேரத்திலும் வில்லத்தனத்தில் கொடி கட்டுகிறார் ஜோஜூ ஜார்ஜ்.
.ஆடுகளம் நரேன், ஜெயபாலன் கிடைத்த கேரக்டர்களில் நிலைத்து நிற்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் கூத்துப்பாடல் இதயத்தை குளிர்விக்க, தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் கடல் காட்சிகள் சிலீர் அழகு.
தனபால் என்ற பெரும்புள்ளியின் ஒரு புகைப்படம் கூடவா போலீசிடம் இருக்காது?
பபூன் கதையை திரைப்படுத்தியவிதத்தில் ஹீரோவாக தெரிகிறார், இயக்குனர் அசோக் வீரப்பன்.