டிரிக்கர் பட விமர்சனம்
காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்கு வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை
காவல்துறையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வா, காக்கி சட்ைட அணிய அவசியமில்லை. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதன்மூலம் பல எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். இதற்கிடையே அனாதை இல்லத்தில் இருந்து அதர்வாவின் அண்ணன் தத்தெடுக்கும் பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து குழந்தையை மீட்க போராடும் அதர்வாவுக்கு, அந்த கும்பல் செய்யும் செயல் குறித்து தெரிய வருகிறது. ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, அதை எப்படி செய்கிறார் என்பதே ‘ட்ரிகர்’.
சண்டைக் காட்சிகளில் அதர்வாவின் வேகத்தில் நிஜமாகவே தீப்பொறி பறக்கிறது. காதலி தான்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் தேர்ச்சி தெரிகிறது.
நாயகியாக வரும் தான்யா காதலுக்கு சற்று எட்டியே நிற்கிறார். இதனால் கதையின் நாயகிக்கான கம்பீரம் ஹாட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறது.
நடிகர் முரளியுடன் சேர்ந்து நடித்த சின்னி ஜெயந்த், இந்த படத்தில் ஆச்சரியமாக அவர் மகன் அதர்வாவுடனும் பொருந்திப் போகிறார், நடிப்பில்.
முனீஸ்காந்த், அழகம்பெருமாள், சீதா, அறந்தாங்கி நிஷா தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
பார்வைக்கு அமைதி. ஆனால் செயலில் ஆழம் என வரும் ராகுல் தேவ் ஷெட்டி வில்லன் நடிப்பில் அமைதிப்புயலாக மிரட்டுகிறார். அதர்வாவின் அப்பாவாக அருண்பாண்டியன் காக்கி சட்டை நடிப்பில் புது இலக்கணம் படைக்கிறார். அல்சைமர் மறதி நோயால் அவதிப்படும் இடத்தில் இந்த முன்னாள் அதிரடி நாயகன் நடிப்பு நாயகனாக பரிமளிக்கிறார்.
ஜிப்ரானின் இசையும் கிருஷ்ணன்வசந்த்தின் ஒளிப்பதிவும் இந்த அதிரடிக்கதையின் இன்னபிற சிறப்புக்கள்.
போலீஸ் கதையை புதிய கோணத்தில் எடுத்துச்செல்லும் விதத்தில் சிக்கர் அடிக்கிறார், இயக்கிய சாம் ஆண்டன்.