திரை விமர்சனம்

கடாவர் பட விமர்சனம்

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் மனித உடல்களை தான் கடாவர் என்று அழைப்பார்கள். படத்தின் நாயகி தடயவியல் நிபுணர் என்பதாலும், மருத்துவத்துறையில் நடக்கும் க்ரைம் பற்றிய கதைக்களம் என்பதாலும் இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை காவல்துறை தடயவியல் நிபுணரான அமலா பால் கண்டுபிடிக்கிறார். அந்த கொலை வழக்கு தொர்பாக சிறையில் இருக்கும் திரிகுன் மீது சந்தேகப்படுகிறது போலீஸ். ஆனால், அவர் சிறையில் இருக்கும்போதே மற்றொரு மருத்துவர் கொலை செய்யப்படுகிறார். அந்த மருத்துவரை கொலை செய்ததும், இதய அறுவை சிகிச்சை மருத்துவரை கொலை செய்ததும் ஒரே நபர் தான் என்பதை அமலா பால் தனது தடயவியல் மூலம் கண்டுபிடிக்க… சிக்கினானாஅந்த கொலையாளி? கொலைக்கான காரணம் என்ன என்பது பரபர விறுவிறு திரைக்கதை.

பத்ரா என்ற தடயவியல் நிபுணர் கேரக்டரில் அமலாபால். அனுபவம் மிக்க நடிப்பு மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்.
கதையின் திருப்புமுனை கேரக்டரில் வரும் அதுல்யா ரவி, தனது துடிதுடிப்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

காவல்துறை அதிகாரியாக ஹரிஷ் உத்தமன், அதுல்யாவின் கணவராக திரிகுன், அமலா பாலின் உதவியாளராக வரும் வினோத் சாகர், முனிஷ்காந்த், ரித்விகா சிங் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் கேமரா தடயவியல் பரிசோதனை காட்சிகளை உண்மையாக நடப்பது போலவே காட்சிப்படுத்தி பிரமிக்க வைக்கிறது

ரஞ்சின் ராஜின் இசையில் பாடல்கள் இனிமை.

மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற சம்பவத்தை சுற்றி நகரும் அபிலாஷ் பிள்ளையின் கதைக்கு அனூப் எஸ்.பணிக்கர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே பல படங்களில் கையாளப்பட்ட கரு தான் என்றாலும், திரைக்கதையில் அமைத்த கிளைக்கதைகள் படத்தை வித்தியாசப்படுத்தி ரசிக்க வைக்கிறது. கொலையாளி யார் என்பது எதிர்பாராத சஸ்பென்ஸ். அதுவே கடைசி வரையிலான ரசிகனின் எதிர்பார்ப்புக்கும் தீனி போட்டு விடுகிறது.