காவல்துறை பணியில் இருக்கும் ஆர்.கே.சுரேஷின் மகளும், மனைவியும் ஒரேமாதிரி விபத்தில் இறந்து போகிறார்கள். இதனால் மனம் உடைந்த ஆர்.கே.சுரேஷ் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த காவல்துறை நண்பர்கள் இளவரசு, மாரிமுத்து மட்டும் உடன் இருக்கிறார்கள். பதவியில் இல்லாவிட்டாலும் முக்கியமான கேஸ்களில் தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி குற்றவாளிகள் பிடிபட காரணமாகிறார்.
இந்நிலையில் தனது மனைவியும் மகளும் இறந்தது தற்செயல் அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை கண்டு பிடிக்கிறார். கொலையாளிகள் யார்? எதற்காக இந்த ரத்தவெறி பிடித்த கொலைகள் என்பதை கண்டுபிடிக்கும் ஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி தடாலடியில் விறுவிறு திகுதிகு கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தனது கேரக்டரின் கனம் தெரிந்து அதற்கு‘ நடிப்பு நியாயம்’ செய்திருக்கிறார். உடல்மொழியில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களோடு திரையில் வாழ்ந்திருக்கிறார், மனிதர். கிளைமாக்சில் இவரது சோகம் திரை தாண்டி நம் கண்களையும் குளமாக்கி விடுவது நிஜம்.
நாயகியாக வரும் பூர்ணா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல் கண்களால் மட்டுமே உணர்வுகளை கடத்தும் அந்த நடிப்பு தனி அழகு. சிறப்பு தோற்றத்தில் வரும் மது ஷாலினி, இன்னொரு சிறப்பு.
இளவரசு, மாரிமுத்து, பக்ஸ் கொடுத்த கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையும் வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் பிரதான தூண்கள்.
மலையாளத்தில் ‘ஜோசப்’ என்ற பெயரில் ஹிட்டடித்த படத்தை தமிழிலும் இயக்கி ‘அட’ போட வைத்திருக்கிறார், இயக்குனர் பத்மகுமார். மனதை படபடக்க வைக்கும் அந்த கிளைமாக்ஸ் இயக்குனர் ஸ்பெஷல்.