சினிமா செய்திகள்

விக்ரம்-துருவ் நடிப்பில் ‘மகான்’ படத்தின்ஆக்‌ஷன் த்ரில்லர் டிரெய்லர் பிரைம் வீடியோ வெளியிட்டது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித்குமார் தயாரித்துள்ள மகான் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது.
பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேர்மையான, கொள்கைப் பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதைக்குள் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ‘‘திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் முழு முயற்சியுடன் ஒத்துழைத்து, ஆதரவு தந்ததின் விளைவாக உருவான இந்த படம் முழுமையான அன்பின் வெளிப்பாடு. அதோடு விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் இது அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணர்ந்துள்ள இப்படத்தை ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அமேசான் பிரைம் வீடியோ மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் நடிகர் விக்ரம் கூறுகையில், “மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் சரியான கலவையைக் கொண்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60-வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாகும், இரண்டாவதாக எனது மகன் துருவ் விக்ரம் இந்த படத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குனருடன் பணி புரிவது மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார்.
துருவ் விக்ரம் என்ன சொல்கிறார்?

“மகான் எனக்கு முக்கியமான திரைப்படம். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதோடு கார்த்திக் சுப்புராஜ் சாரின் இயக்கத்தில் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களையும் தீவிரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். எனது நடிப்பையும் படத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பிடித்துள்ள நடிகை சிம்ரன் படம் பற்றி இப்படி கூறுகிறார்.

“விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜூடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம் ஆகும். ‘மகான்’ ஒரு ஆக்‌ஷன் நிறைந்த பொழுதுபோக்குப் படமாகும், கதை முழுவதும் பலவிதமான டிராமா மற்றும் உணர்ச்சிகள் பின்னிப் பிணைந்துள்ளது. திரைப்படத்தில் எனது கதாபாத்திரமான நாச்சி, தனது சிறிய மற்றும் அன்பான குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ஓர் எளிமையான மற்றும் இரக்க குணமுள்ள பெண். தனது கணவர் கொள்கைப் பிடிப்பான வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது அவரது உலகம் எவ்வாறு சிதைகிறது என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பிரைம் வீடயோபார்வையாளர்கள் படத்தை அதன் அற்புதமான கதைக்களத்திற்காகப் பெருமளவில் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.’’

நடிகர் பாபிசிம்ஹா கூறுகையில், ‘‘மகான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அற்புதமான கதைக்களம் மற்றும் அதை இயக்குநர் விளக்கியுள்ள விதம் பார்வையாளர்களைக் கவரும்” என்கிறார்.

கதை சுருக்கம்: மகான் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதை. மனைவி மற்றும் ஒரு மகனுடன் ஒரு சிறிய குடும்பத்தில் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, ஒருபோதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் சாதாரண நபரின் கதை. அவரது ஒரு நாள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துடன் ஒத்திசைப்பது போல இயல்பான வாழ்க்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை மீறி அடியெடுத்து வைக்கும் போது, அமைதியான வாழ்க்கை எதிர் திசையில் மாறி, அதன் விளைவாக அவரது குடும்பம் அவரை விட்டு வெளியேறுகிறது. சிறு வயதில் தொலைந்து போன ஒரு நண்பருடன் கைகோர்த்து கோடீஸ்வரராகி ராஜ வாழ்க்கையை வாழத் துவங்குகிறார். இருப்பினும், ஒவ்வொரு நாளும் தனது மகன், தன்னுடன் இல்லாததை நினைத்து வருந்துகிறார். ஒரு நாள் அவரது மகன் ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் திரும்பி வரும்போது அவருக்கு வாழ்க்கை முழுமை பெற்றது போலத் தோன்றுகிறது. அடுத்து என்ன நடக்கிறது? என்பதே இந்த பரபரப்பான, அதிரடியான ரோலர் கோஸ்டர் சவாரியின் முக்கியக் கட்டம்.

மகான் கதை கேட்கிறப்பவே நெஞ்சைத் தொடுதே…