சுசி.கணேசன் தேடும் ‘சூப்பர் ஸ்டார்’ நீங்களா?

இசைஞானி இளையராஜா இசையில் 4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மஞ்சரி சுசி.கணேசன் தயாரிக்க, இயக்குனர் சுசி.கணேசன் இயக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா.’
தமிழில் ‘விரும்புகிறேன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2’ என இயக்கியவர், அப்படியே இந்தியிலும் 2 படங்களை இயக்கி தயாரித்திருக்கிறார். இவர்் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் சீடர். அதோடு இவர் இயக்கிய இரண்டாவது படமான ‘பைவ் ஸ்டார்’ படத்தை தயாரித்தது இவரது குரு மணிரத்னமே என்பது இவருக்கான மகுடம்..
தற்போது கொஞ்சம் இடைவெளி விட்டு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. சுவரில் கரிக்கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு வெளியான அந்த ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ படத்தில் நடிக்கும் இரண்டு ஹீரோக்கள் யார் என்ற கேள்வியை கிளப்பியது. சஸ்பென்ஸ் விலகாத நிலையிலேயே படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் மஞ்சரி சுசி.கணேசன் பேசுகையில், “ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம். இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு. எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி.கணேசன், இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்காகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும், மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்தப் படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட 20-ல் இருந்து 45 வரை” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குனர் சுசி.கணேசன் இதுபற்றி கூறுகையில், “பலருக்கும் நடிக்கும் ஆசை இருந்தும் அதற்கான திறமை இருந்தும் பல்வேறு காரணங்களால் நடிப்புக் கனவை ஒத்தி வைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள். தோற்றமும், முக பாவனையும் முக்கியமான இந்த கதாநாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருப்பதன் நோக்கம், சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே’’ என்றார்.
ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் தங்கள் நடிப்பை பதிவு செய்து வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் . இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள் 12 பேரும் 12 வாரங்கள் நடக்கும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனல் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
நடிகை சிநேகாவை பிரபல வாரப் பத்திரிகை மூலமும், நடிகர் பிரசன்னாவை பிரபல டி.வி. மூலமும் தேர்ந்தெடுத்த சுசி.கணேசன் இம்முறை ‘வருங்கால சூப்பர் ஸ்டாரை’ சேனல் மூலம் தேடும் முயற்சி ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ‘டேலண்ட் ஹன்ட் ஷோ’ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை.
“அன்றைக்கு அது புதுசாக இருந்தது. கால மாற்றத்திற்கேற்ப இன்றைக்கு இது புதுமையாக இருக்கும்…” என்று சுசி.கணேசன் சொல்ல…
தயாரிப்பாளர் மஞ்சரியோ, “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி.கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும்’’ என்றார்.
தொடர்ந்து கூறுகையில், ‘‘இதே நிகழ்ச்சி ‘கல்கா சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும். அதற்கான வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந்நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் சுசி.கணேசன் ஈடுபடுவார். வெற்றி பெறுவார்.
எங்கள் நிறுவனத்தின் அடுத்த படம் ‘ராணி வேலு நாச்சியார்.’ இந்த வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும், குழுவும் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்படும்.
அடுத்து ‘Bullet 19’ என்ற பெயரில் பிரபல நடிகர் நாயகனாக நடிக்கும் பெரிய பட்ஜெட் படத்தை சுசி.கணேசன் இயக்கவிருக்கிறார். இதற்காக அந்த பிரபல ஹீரோவுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது தொடர்பான அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவோம்’’ என்றார்.
இனியென்ன… எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இப்போதே போட்டிக்குத் தயாராகலாம்.
‘‘போட்டியில் வென்றால் நடிக்க வாய்ப்பு. அப்படியே சூப்பர் ஸ்டார் அந்தஸ்து. ஒருவேளை அந்த ஹீரோ வாய்ப்பு நழுவிப் போனால் அவர் படத்தின் இன்னபிற கேரக்டர்கள் எதிலாவது நடிக்க வாய்ப்பு உண்டா?’’
சுசி.கணேசனை கேட்டால், ‘‘நிச்சயம் உண்டு. படத்தின் முக்கிய கேரக்டர்களில் அவர்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதில் நடிக்க வைக்கப்படுவார்கள். ஒருவேளை ‘ஹீரோவாக நடிப்பது தான் என் கனவு. அதனால் மற்ற வேடங்களில் நடிக்க விருப்பமில்லை’ என்பவர்கள் மட்டும் அனுப்பி வைக்கப்படுவார்கள்’’ என்றார்.
