சினிமா செய்திகள்திரை விமர்சனம்

தள்ளிப்போகாதே பட விமர்சனம்

தன்னைக் காதலித்தவனுக்காக ஒரு பெண் எடுக்கும் முடிவும், அந்த முடிவை அந்தக் காதலன் எப்படிக் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதுமே இந்த ‘தள்ளிப் போகாதே’. நானி, நிவிதா தாமஸ், ஆதி நடித்த ‘நின்னு கோரி’ என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்.

முன்னாள் காதலி இப்போது இன்னொருவன் மனைவி. தற்போது வெளிநாட்டில் கணவருடன் இருக்கும் அவளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தபோது ‘நீ சந்தோஷமாக இல்லை’ என்கிறான் காதலன். ‘யார் சொன்னது? சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்’ என்கிறாள் முன்னாள் காதலி. ‘நான் நம்ப மாட்டேன்’ என முன்னாள் காதலன் சொல்ல… ‘வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து 10 நாட்கள் தங்கு. அப்போது நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்பதை புரிந்து கொள்வாய்’ என முன்னாள் காதலி சொல்ல…

‘என் மீதான காதலை மறக்க முடியாமல் நீ இருக்கிறாய் என்பது நிருபணமானால் என்னுடன் வர வேண்டும்’ என்று சொன்னபடி, காதலனும் போகிறான், கணவருடன் வாழும் காதலி வீட்டுக்கு. அந்த 10 நாட்களில் அந்த வீட்டில் நடந்தது என்ன? என்பது கிளைமாக்ஸ்.
காதலனாக அதர்வா , காதலியாக அனுபமா பரமேஸ்வரன், அனுபமாவின் கணவராக அம்தாஷ் திரைமுகம் காட்டுகிறார்கள். அதர்வா ஆரம்ப காட்சிகளில் படுசுறுசுறு. அனுபமாவுடன் காதல் தோன்றும் இடங்களில் இளமை கொஞ்சும் நடிப்பு. காதலி இன்னொருவரின் திருமதி ஆன நிலையில், அவள் வீட்டில் தங்கி காதலியையும் அவள் கணவரையும் வெறுப்பேற்றும் இடங்களில் ரசிக்க வைக்கிறார்.
காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரன், முன்னாள் காதலனாக அதர்வாவை சந்திக்கும் இடத்தில் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். மற்ற இடங்களில் நடிக்க முன்றிருக்கிறார். அனுபமாவின் கணவராக வரும் அமிதாஷ், மனைவியின் முன்னாள் காதலனை வீட்டில் தங்கவைக்கும் அந்த பெருந்தன்மையை முகத்திலும் கொண்டு வருகிறார். ( ‘கதைப்படி இவர் தங்கமான புருஷன்.’)
அனுபமாவின் அப்பாவாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் அனுபவ நடிப்பில் மிளிர்கிறார். இவரும் காளிவெங்கட்டும் ரசிகர்கள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். சண்முகசுந்தராமின் கேமரா பிரான்சின் அழகை இம்மி பிசகாமல் கண்களுக்குள் கடத்தி விடுகிறது.

ரீமேக் கதை என்றாலும் ஏற்கனவே பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ சாயல் கிளைமாக்சை இயக்குனர் கண்ணன் தவிர்க்க முயன்றிருக்கலாம். என்றாலும் காதல் பார்வையில் சொல்லப்பட்ட வித்தியாசமான கதைக்களம் என்ற விதத்தில் தள்ளிப் போடாமல் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *