ஜெயில் பட விமர்சனம்

வசந்தபாலன் இயக்கத்தில் வெயில், அங்காடித் தெரு வரிசையில் இப்போது ‘ஜெயில்.’
திருடுவதை தொழிலாக செய்யும் நாயகன், இரு வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் கஞ்சா விற்பனை, அது சார்ந்த மோதல்கள் என ஒரு படம் முழுக்க யாரோ யார் யாரையோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், பிரியாணிக்கடை நாயகியிடம் காதல் கலாய்ப்பு என்று சின்னச் சின்ன மெருகேற்றல்களுடன் நகர்கிறது, படம்.
நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் அந்த ஏரியாவாசியாகவே மாறி அதகளம் பண்ணுகிறார். அபர்ணதியுடனான அவரது அடாவடிக் காதல் ரசிக்க வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் அம்மாவாக ராதிகா பொறுப்பற்ற மகனின் தாயாக அந்த கேரக்டரில் பளிச். மகன் அழைத்து வந்த காதலி அபர்ணதியிடம், ‘ஏம்மா உனக்கு வேற பையனே கிடைக்கலையா?’ என கேட்கும் அவரது நடிப்பில் அனுபவ வாசனை.
நண்பர்களாக நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, அவருடன் வேலை செய்யும் சரண்யா ரவிச்சந்திரன் கேரக்டர்களாகவே மாறித்திரிகிறார்கள். நாயகி அபர்ணதி ஜி.வி.பிரகாஷிடம் போடும் செல்லச் சண்டை ரசிக்க வைக்கிறது. நாயகனுடனான காதல் நெருக்கத்திலும் வஞ்சமில்லா நடிப்பை வழங்குகிறார்.
தப்பான போலீஸ் அதிகாரியாக வரும் ரவிமரியா லஞ்சத்திலும் வஞ்சத்திலும் இருவேறு ரசனை நடிப்பை வழங்குகிறார். ஊர்ப்பெரியவர் கேரக்டரில் பி.டி.செல்வகுமார் கச்சிதம்.
ராக்கியின் அக்கா ஜெனிபர் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்ட சென்டிமென்ட் கேரக்டர் என்பது பார்த்த மாத்திரத்தில் புரிகிறது. கணேஷ் சந்திராவின் கேமரா அதிரடி காட்சிகளில் கூடவே ஓடுகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் பரம சுகம். கஞ்சா கடத்தில், திருட்டு தொழில் போதைப்பொருள் கும்பலுக்குள் மோதல் என்ற களம் இயக்கிய வசந்தபாலனுக்கு புதுசு. குடிசைமாற்று வாரிய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கலை ‘கலை ’கதாபாத்திரம் கொண்டு பேசியிருக்கும் இடத்தில் மட்டும் ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார்.
