சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ஆன்டி இந்தியன் திரை விமர்சனம்

சுவர் விளம்பர கலைஞரான பாட்ஷா கொலை செய்யப்படுகிறார். பாட்ஷாவின் தந்தை இஸ்லாமியர். அவளுடைய தாய் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர். இதனால் பாட்சாவின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இதனால் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை மையமாக்கி எப்படிஅரசியல் செய்கிறார்கள் என்பது விறுவிறு கதைக்களம்.
பாட்ஷா பிணமானதில் இருந்து துவங்குகிறது படம். இப்ராஹிம்-சரோஜா என்னும் லூர்து மேரி தம்பதிகளின் மகன் தான் இந்தபாட்ஷா, அதனால் ‘இறந்த பிறகு பாட்ஷா எந்த மதம்?’ என்பதில் குறுக்கே வருகிறது, பிரச்சினை..இப்ராஹமின் மகன் என்றாலும் பாஷாவின் தாயார் சரோஜா ஆயிற்றே,. அதனால் உடல் அடக்கம் எந்த மத முறைப்படி என்பதில் தொடரும் சர்ச்சையால். இரண்டு நாளாக பிணம் நகராமல் வீட்டு வாசலிலேயே இருந்து விட… இந்த நேரத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி ஜெயிக்கும் வாய்ப்பு அதிகம் என்ற தகவல் ஆளுங்கட்சிக்குப் போய்ச்சேர… இங்கே நுழைகிறது அரசியல். தேர்தலை நிறுத்தி தங்கள் கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ள இரு கட்சிகளுமே பிணமான பாட்ஷாவை வைத்து நடத்தும் சூழ்ச்சி அரசியல் அதிரடி கிளைமாக்ஸ்.
அரசாங்கமும், அதிகாரமும் மத மோதல்களை எப்படி தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்ற விஷயங்களை பட்டியலிட்ட விதத்தில் தனி கவனம் பெறுகிறது படம்.
படத்தில் மூன்று மதங்களின் பிடிவாத விஷயங்களில் இயக்குனரின் முதிர்ச்சியும் சமூக அக்கறையும் வெல்டன். எங்குமே சார்பு நிலை எடுக்காமல், யாரையும் முகம் சுளிக்க வைக்காமல் சமன்படுத்திப் போன விதத்தில் கத்தி மேல் நடந்து மேஜிக் செய்திருக்கிறது, திரைக்கதை.
முதல் அமைச்சராக ராதாரவி, ஏழுமலையாக ஜெயராஜ், சரோஜா என்னும் லூர்து மேரியாக – விஜயா, பள்ளி வாசல் பெரியவராக வேலுபிரபாகரன், அரசியல்வாதியாக கர்ணராஜா, கிறிஸ்துவ பாதராக ஸ்னேபா, போலீஸ் அதிகாரியாக ‘வழக்கு எண்’ முத்துராமன், உயர்போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் என நடித்த அத்தனைபேரும் கதை மாந்தர்களாக முழுப்படத்திலும் உயிர்ப்புடன் நடமாடுகிறார்கள்.மனதில் தடம் பதிக்கிறார்கள்.
சாவு வீட்டில் கானா பாட்டு, ‘வெச்சிருந்தா மீன் கெட்டுப் போயிடும். வித்துட்டு அப்புறம் வரவா’ என்று இழவு கேட்க வந்த பெண்கள் என படம் முழுக்க அன்யோன்யம் விரவிக் கிடக்கிறது..
இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு கதையை இயக்கியதோடு பிணமாகவும் நடித்து இசையும் அமைத்து இன்றைய திரையுலகின் நம்பிக்கை வரவாகி இருக்கிறார்,புளு சட்டை இளமாறன்.
இடைவேளையிலும் படத்தின் இறுதியிலும் வெளிப்படும் ‘பசி’ சத்யாவின் அந்த ஒலக்குரல் சமூக அமைதிக்கான எச்சரிக்கை.பாட்ஷாவின் இறுதிப்பயணமே பிரதான காட்சிகளை எடுத்துக் கொண்டதால் அவரை கொலை செய்தது யார்? என்பதை மட்டும் அடுத்த பாகத்தில் சொல்வார்களோ, என்னவோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *