விஷாலை அடி வெளுத்த ஆர்யா: எனிமி பட ருசிகரம்
நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது ‘எனிமி’ படம். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால்-ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி நடித்துள்ள இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது, படக்குழு.
படத்தின் நாயகர்களில் ஒருவரான விஷால் பேசுகையில், ‘‘இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடிக்குப் பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால், ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென்பதற்காக படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருகிறார்.அவருடன் அடுத்தும் ஒரு படத்திலும் இணைகிறேன்.
படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப் படம். ஆர்யாவிடம் ‘உலகம் அழியப்போகிறது’ என்று சொன்னால் கூட அசராமல், ‘இரு சைக்கிளிங் முடித்துவிட்டு வருகிறேன்’ என்பார். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை… திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, அப்போது தான் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்து விட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டதால் சண்டைக் காட்சியில் என்னை அடி வெளுத்து விட்டார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது, மருத்துவர் மற்றும் நர்ஸ் கூடவே இருப்பார்கள். நான் அல்லது ஆர்யா இருவரில் ஒருவர் அடிபட்டு சென்று கொண்டே இருப்போம். அவ்வளவு அடிபடும்.
இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தின் விமர்சனத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஏனென்றால் ஒரு படத்தில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு விமர்சனம் என்பது திரையரங்கிற்குச் செல்லும் ரசிகர்களை தடுப்பதாக அமைந்து விடக்கூடாது. விமர்சனம் பார்த்து படத்துக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் இப்போது தான் மீண்டும் திரையரங்கிற்கு மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆகையால் விமர்சனத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்றார்.