என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்படும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் சரியா என்பதை கமர்ஷியல் களத்தில் சொல்ல வந்திருப்பதே இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்.’
இயக்குனராக நினைக்கும் ஹீரோ, தயாரிப்பாளரிடம் ஒரு கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. ஆனால், அந்த கதை தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக, தன்னிடம் இருக்கும் மற்றொரு பரபரப்பான கதையை சொல்கிறார். ஹீரோ சொன்ன அந்த பரபரப்பான கதை என்ன?, அந்த கதை தயாரிப்பாளருக்கு பிடித்ததா இல்லையா? என்பது படத்தின் பரபர விறுவிறு கதைக்களம்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக்கின் காதல் கதைகளை முதல் பாதியில் பல பகுதிகளாக பிரித்து சொல்வது ரசனை. ஒவ்வொரு கதையிலும் நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார், நாயகன்.
படத்தில் ஐரா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா என நான்கு நாயகிகள். நால்வரும் தங்கள் கேரக்டர்களில் பூரணமாக வெளிப்படுகிறார்கள். இருந்தாலும், இவர்களையெல்லாம் தனது நடிப்பால் ஓரம் கட்டி விடுகிறார் ரோகிணி. முதல் பாதியில் வெகுளித்தனமான அம்மா கதாபாத்திரத்திலும், இரண்டாம் பாதியில் நேர்மையான அரசு அதிகாரியாகவும் வரும் அவர் தான் படத்தின் முதல் பலம்.
படத்தயாரிப்பாளராக வரும் பகவதி பெருமாள், நடிக்கத் தெரிந்த ஜூனியர் பாலையா தங்கள் கேரக்டர்களை நடிப்பால் பேச வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணாவின் கேமரா ஜாலம் செய்கிறது. இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியத்தின் இசையில் பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித் வரிகள் சுகராகம். குறிப்பாக ஜெகன் கவிராஜின் “சீரக பிரியாணி…” கமகம பிரியாணி.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மிக முக்கியம்; ஒரு முறை இடஒதுக்கீட்டை அனுபவித்தவர் மற்றொரு முறை அதை அனுபவிக்கக்கூடாது என்ற பின்னணியை கதைக்களமாக்கி, அதற்கு தன் பார்வையில் ஒரு தீர்வு சொல்கிறார், இயக்குனர் பிரபு ஜெயராம். சட்டத்துக்குள் மனிதநேயமும் இணைந்த பிற்பகுதி இயக்குனரை தூக்கி நிறுத்தி விடுகிறது.