தமிழ்நாடு தேர்தல் பரபரப்பில் இருக்கிற சமயமாகப் பார்த்து – தேர்தல் கால அரசியல் கேலிக்கூத்துகளை, ஓட்டுக்காக வேட்பாளர்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் ஒரு படம்.

தென்மாவட்டம் ஒன்றில் அமைந்துள்ள சூரங்குடி என்ற சிறிய கிராமம், இரு சாதிக்காரர்களால் வடக்கூர் – தெக்கூர் எனக் பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில், ஊர்த் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிறது. இரு சாதிக்காரர்களும் போட்டியிடுகிறார்கள். வெற்றியாளரை ஒரு ஓட்டு தீர்மானிக்கும் என்ற நிலை. அந்த ஒரு ஓட்டுக்கு மண்டேலா என்பவர் சொந்தக்காரராக இருக்கிறார். அதுவரை ஊர் மக்களால் கேவலமாக நடத்தப்பட்ட, சாதியில் தாழ்ந்த மண்டேலாவை தேர்தலில் போட்டியிடுகிற இரு தரப்பும் தாங்கோ தாங்கென்று தாங்குகிறது. பிச்சைக்காரர்களைக் காட்டிலும் மோசமான நிலையில் இருக்கிற மண்டேலாவுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. அதையெல்லாம் அனுபவிக்கிற மண்டேலா யாருக்கு ஓட்டு போட்டார் என்பதே கிளைமாக்ஸ்!

நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்து, தான் இயக்கிய குறும்படங்களுக்கு விருதுகள் பெற்ற மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்!

காமெடி நடிகராக பார்த்துப் பழகிய யோகிபாபு வேறொரு பரிமாணத்தில் குணசித்திர நடிகராக, கதையின் நாயகன் மண்டேலாவாக வருகிறார். ஆதரவற்ற நிலையில், தனது பெயர் என்னவென்பது கூட தெரியாமல், உடுத்திக் கொள்ள நல்லதாக ஒரு துணி கூட இல்லாத சூழ்நிலையில், ஊர் மக்களால் அடிமையாக நடத்தப்பட்டு, வலிகளைச் சுமக்கிற பாத்திரத்தில் பரிதாபத்தை அள்ளுகிறார். அவரது நடிப்புப் பங்களிப்பு, யோகிபாபுவுக்கு இந்தளவுக்கு நடிக்க வருமா என்ற ஆச்சரியத்தை தருகிறது. விருதுகள் தேடி வரலாம்!

மண்டேலா மீது அக்கறை வைத்து, அவருக்கு பெயரும் வைத்து ஆதரவு தருகிற தபால் அலுவலக ஊழியராக ஷீலா ராஜ்குமார். ஏற்கிற கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு யதார்த்தமான எளிமையான நடிப்பால் மனதில் நிறைபவர், இந்த படத்திலும் ஏற்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

யோகிபாவுக்கும் அவருடன் வருகிற சிறுவனுக்குமான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சி. அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டுக்குரியது.

செல்வாக்கிலும், சாதிவெறியிலும் ஊறிப்போனவர்களாக ஜி,எம்.குமார், கண்ணா ரவி இருவரிடமிருந்தும் வெளிப்படுகிறது நேர்த்தியான நடிப்பு!

படத்தின் இன்னபிற நடிகர் நடிகைகளும் கதைக்கேற்ற தங்கள் கச்சிதமான நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பரத் சங்கரின் பின்னணி இசை படத்துக்கு பெரும்பலம். பாடல்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கிராமத்து வீடு, தெருக்கள் என மண்மணத்துடன் நகரும் காட்சிகளை வித்யூ அய்யன்னாவின் கேமரா அழகாக பதிவு செய்திருக்கிறது.

ஊரில் வயதில் பெரியவராக – ஊர்த் தலைவராக வருகிற சங்கிலி முருகனுக்கு இரண்டு மனைவிகள் என்பது, ஊருக்குப் பொதுவாக கழிவறை கட்டி அதை யார் முதலில் பயன்படுத்துவது என்ற வாக்குவாதம், யோகிபாபுவுக்கு மண்டேலா என்ற பெயர் வைக்கப்படுவதன் பின்னணி, யோகிபாவுவை ஓட்டுக்காக ஏலமெடுப்பது என படத்தில் காட்சிக்கு காட்சிக்கு திகட்டத்திகட்ட ரசிக்க சுவாரஸ்யங்கள் ஏராளம் தாராளம்!

இப்படியொரு படத்தை தவறவிடலாமா? அதுவும் தேர்தல் காலத்தில்!

தியேட்டருக்கு வந்தால் கணிசமான வெற்றியைக் குவிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் கொண்ட இந்த படம் தியேட்டரில் ரிலீஸாகாமல், வரும் ஞாயிறன்று (4.4. 2021) நேரடியாக விஜய் டி.வி.யிலும், மறுநாள் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/mandelaaaa-1024x634.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/mandelaaaa-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தமிழ்நாடு தேர்தல் பரபரப்பில் இருக்கிற சமயமாகப் பார்த்து - தேர்தல் கால அரசியல் கேலிக்கூத்துகளை, ஓட்டுக்காக வேட்பாளர்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் ஒரு படம். தென்மாவட்டம் ஒன்றில் அமைந்துள்ள சூரங்குடி என்ற சிறிய கிராமம், இரு சாதிக்காரர்களால் வடக்கூர் - தெக்கூர் எனக் பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில், ஊர்த் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிறது. இரு சாதிக்காரர்களும் போட்டியிடுகிறார்கள். வெற்றியாளரை...