திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அந்த திருட்டாலேயே அழிகிற கதைக்களமே ‘கணேசாபுரம்‘ படத்தின் அடித்தளம்.

அந்த மூன்று உயிருக்குயிரான நண்பர்களுக்கும் திருடுவதுதான் முழு நேரத் தொழில். அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டாரத்திலுள்ள சில ஊர் மனிதர்களுக்கும் அதே பிழைப்புதான். இந்த களவாணிகளுக்கு ராஜபரம்பரை வழிவந்த ஒரு தலைவரும் உண்டு. அந்த தலைவரிடம், திருடுவதில் யார் முன்னணி என்பதை நிரூபிப்பதில் போட்டா போட்டி. அந்த போட்டியில் எப்போதும் முதலிடத்தில் இருக்கிற காசிமாயன், ‘டிக் – டாக்’ ராஜ்பிரியன் கூட்டணியை வீழ்த்த எதிரணியினர் களமிறங்குகிறார்கள். அந்த வெறியாட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதே மிச்சம் மீதி கதை.

படத்தின் நாயகனாக வருகிற சின்னா கதை எழுத, சின்னாவுக்கு நண்பனாக வருகிற காசிமாயன் தயாரித்திருக்கிறார். இயக்கியிருப்பவர் வீரங்கன்.

கயல் பெரேரா, சரவணசக்தி, ராஜசிம்மன், ஹலோ கந்தசாமி என மூன்று நான்கு பேர் மட்டுமே பரிச்சயமான முகங்கள். ஹீரோ, ஹீரோயின் என மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள். கிராமத்து மனிதர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்திருப்பது கச்சிதம். நாயகன் சின்னாவாகட்டும், அவர்களுக்கு நண்பர்களாக வருகிறவர்களாகட்டும் அத்தனைப் பேரும் நடிப்புக்கு புதுமுகங்கள் என்று தெரியாதபடி நடித்திருப்பது பலம்!

நாயகி ரிஷா ஹரிதாஸின் பளீர் புன்னகையும், இயல்பான நடிப்பும் தனியாகத் தெரிகிறது. இன்னொரு நாயகி ஹரிணியும் கவர்கிறார்.

திருடர்கள் சின்னா, காசிமாயன், ராஜ்பிரியன் கூட்டணியின் நட்பில் அத்தனை ஆழம்.

உயிரோட்டமான காட்சிகளுக்கு தனது கேமராவால் ஊட்டச்சத்து வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாசு.

பா. இனியவன் வரிகளில், ராஜாசாய் இசையில் காதல் பாடல்களில் இனிமை பொங்குகிறது.

படத்தில் காதல், டூயட் கமர்சியல் மசாலாவும் உண்டு; விவசாயிகளுக்கு நேர்கிற கொடுமை பற்றி எடுத்துச் சொல்ல உருக்கமான காட்சியும் உண்டு. எல்லாவற்றையும் நேர்த்தியாக கொடுக்க முயற்சித்து முடிந்தவரை சிறப்பாக கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டலாம்.

புதியவர்களின் முயற்சியில் குறைகள் இருப்பது சகஜம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரவேற்க கணேசாபுரத்தில் கனமுண்டு!