சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கிய இசைக்கான புதிய தளம் “மாஜா“ தென்னிந்தியாவில் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் முதல் பாடலாக “தீ மற்றும் அறிவு” வழங்கிய “Enjoy Enjaami” பாடல் மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை YouTube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடல் அனைத்து இடங்களிலும் அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று அசத்தியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல், இயற்கையைப் பற்றியும், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்கிற அழகான செய்தியையும் தந்துள்ளது. இந்த பாடல் இசை வல்லுநர்கள் மற்றும் பொது பார்வையாளர்களின் இதயங்களை மட்டுமல்லாமல், தனுஷ் போன்ற பிரபலங்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் மத்தியிலும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது.

கலாச்சார மறுமலர்ச்சியை உண்டுபண்ணும் விதமாக ஏ.ஆர். ரஹ்மானின் “மாஜா” சார்பில் வெளியான விளம்பர வீடியோ வெளிப்படுத்தியபடி, இத்தளத்தில் முகேன் ராவ், மாளவிகா, சத்ய பிரகாஷ் மற்றும் எண்ணற்ற சுயாதீன கலைஞர்களின் இசை தயாரிப்புகள் தொடர்ந்து வெளியாவதற்காக காத்துகொண்டு இருக்கின்றன. வரும்காலங்களில் ரசிகர்களை மெய்மறக்க செய்யும் வகையில், மாஜாவின் தயாரிப்பில் இசை மழை பொழியும்.