இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் தொடுவதெல்லாம் வித்தியாசமான கதைக்களமாகத்தான் இருக்கும். டெடியும் அப்படியே.

சாயிஷா கடத்தப்படுகிறார்; கோமா நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரது உயிர் ஓரு டெடி பொம்மைக்குள் வந்து சேர்கிறது. அதன்பின் அந்த பொம்மை நடக்கிறது, பேசுகிறது, தன்னைக் கடத்தியவர்கள் பற்றி ஆர்யாவிடம் சொல்கிறது. ஆர்யா சாயிஷாவை மீட்டெடுக்க கிளம்புகிறார். நாடு நாடாகப் பறக்கிறார்.

சாயிஷா கடத்தப்பட்டது ஏன்? கடத்தப்பட்டவரின் உயிர் பொம்மைக்குள் வந்தது எப்படி? சாயிஷாவை மீட்க ஆர்யா எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? சாயிஷாவின் உயிர் பிரிந்து பொம்மைக்குள் வந்தபின் சாயிஷா உயிருடன் இருப்பது சாத்தியமா? என அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு ஏராளமான அறிவியல் சங்கதிகளைக் கோர்த்த சுவாரஸ்யமான திரைக்கதை பதில் சொல்கிறது.

ஆர்யா அதீத அறிவாளி, நினைவாற்றலின் உச்சம். உடல்பலமிக்கவர். அவரால் எதையும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ரோபோ! அவரது அதீத அறிவே அவரை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என சந்தேகிக்க வைக்கிறது. தனது அதீத அறிவை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறவர். இப்படியொரு கதாபாத்திரத்தில் ஆர்யா. ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்துவிடுகிற ஆர்யா இதிலும் நீட் அன்ட் கிளீன்! நடை உடை பாவனை அட்டகாசம்!

நாயகியாக ஆர்யாவின் நிஜ வாழ்க்கைத் துணை சாயிஷா. ஆனாலும், அவர்களுக்குள் நெருக்கமான காட்சிகள் இல்லை; ஒருசில உருக்கமான காட்சிகள் மட்டுமே! கதை அவரைச் சுற்றிச் சுழன்றாலும் அவருக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை! அழகால் கவர்வதோடு சரி!

ஆர்யாவுக்கு நண்பனாக, பி.ஏ.வாக சதிஷ். அவர் தன் பாணியில் சிரிக்க வைக்க இடம்தரவில்லை திரைக்கதை!

இயக்குநர் மகிழ் திருமேனி நடிகராக அறிமுகம். வில்லன் என்றாலும் அலட்டலில்லாத நடிப்பால் கவர முயற்சிக்கிறார்.

கருணாகரன், பிரவீனா உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் கொடுத்த வேலையை செய்திருப்பது கச்சிதம்!

டெடி பொம்மையை உயிருடன் உலவுகிற பாத்திரமாக உருவாக்கி அதன் மூலம் நகைச்சுவை, காதல், பாசம் என பல உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பது சாமர்த்தியம்!

இமான் இசையில் பாடல்கள் தென்றலாய் வீச, பின்னணி இசை வழக்கம்போல் கதைக்களத்துக்கு பொருந்துகிறது!

வெளிநாட்டில் நடக்கிற சம்பவங்களைக் காட்சிப் படுத்தியிருப்பதும் சம்பவங்கள் நடக்கிற அந்த இடங்களும் பிரமாண்டம். அந்த பிரமாண்டத்தை அப்படியே கண்களுக்கு கடத்துகிறது ஒளிப்பதிவாளரின் உழைப்பு!

காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்ந்தால் போதும்; அது எப்படி, இது எப்படி என கேள்வி கேட்க மாட்டேன் என்பவர்களுக்கு டெடி செமத்தியான விஷுவல் டிரீட்! டெடி பொம்மையால் குழந்தைகளுக்கு குதூகலம் நிச்சயம்!