சினி நிகழ்வுகள்

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘மோகன்தாஸ்’ படம்… பூஜையுடன் இன்று தொடக்கம்!

தமிழ்த் திரையுலகில், ரசிகர் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். ‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கில் வெளியானது.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘மோகன்தாஸ்’ படத்தை முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் கதையாகும். ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர்.

இந்தப் படத்தின் நாயகி கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ‘களவு’ படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார்  முரளி கார்த்திக்.

த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று கூறுலாம்.