சினி நிகழ்வுகள்

‘சங்கத் தலைவன்’ சினிமா விமர்சனம்

தொழிலாளி – முதலாளி மோதலை தன் பாணியில் தீர்க்கிற ‘சங்கத் தலைவன்.’

தறி நெசவுத் தொழிற்கூடத்தின் உரிமையாளர் மாரிமுத்து. தன்னிடம் பணிபுரிகிற பெண்ணுக்கு தன் தொழிற்கூட விபத்தில் கை துண்டாகிவிடுகிறது. அதற்கு உரிய நஷ்டஈடு கொடுக்காமலிருக்க குறுக்கு வழியைத் தேடுகிறார். குறுக்கு வழி என்றால் துளிகூட பிடிக்காத ‘சங்கத் தலைவன்’ சமுத்திரகனி இந்த விவகாரத்தில் நுழைகிறார்.

தொழிற்கூட உரிமையாளரின் கோபத்துக்கு ஆளாகி, கைது, கோர்ட், சிறை தண்டனை என நிம்மதியிழக்கிறார். அதையெல்லாம் சமாளித்து தன் போராட்டத்தில் வென்றாரா என்பதே கதை…

எழுத்தாளர் பாரதிநாதனின் ‘தறியுடன்’ நாவலை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் மணிமாறன்.

கருத்து சொல்வதும், களமிறங்கிப் போராடுவதும் சமுத்திரகனிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதில் சிவப்புச் சட்டைத் தோழராய் இறங்கியடித்திருக்கிறார்.

சமுத்திரகனியின் மனைவியாக ரம்யா சுப்ரமணியன். விஜய் டி.வி. தொகுப்பாளராக பதிந்துபோன முகம். இந்த படம் மூலம் யதார்த்த நடிப்பால் கிராமத்துப் பெண்ணாகவும் பதிகிறார்.

நயவஞ்சக மனம் சுமந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து; நடிப்பு கெத்து.

கருணாஸ் ஏற்ற கேரக்டரில் நிறைவு. சுனு லெட்சுமி, பாலாசிங் என படத்தின் இன்னபிற கதாபாத்திரங்கள் காட்சிகளுக்கு கனம் சேர்த்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறாத பின்னணி இசை, அழகான பாடலுக்கு இதமான இசை என கவர்கிறார் ராபர்ட் சற்குணம்.

ஸ்ரீநிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவில் விரியும் காட்சிகள் நேர்த்தி.

கிளைமாக்ஸ் வரை கம்யூனிசக் கொள்கை, கோட்பாடு என பயணித்த திரைக்கதை கிளைமாக்ஸில் கமர்சியல் மசாலா பூசிக் கொண்டது அஜீரண உணர்வு.

கமர்ஷியல் என வந்தபிறகு அதே மசாலா படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தால் நீளமான காட்சிகளின் தொய்வைத் தவிர்த்திருக்கலாம்.